பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!
அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் கார் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் முதல் காரை வாங்கி, கார் விற்பனையை அமோகமாகத் துவங்கி வைத்துள்ளார். மேலும், இந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
டெஸ்லாவை இந்தியாவிற்கு கொண்டுவர நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், இந்தியாவில் ஒரு டெஸ்லா தொழிற்சாலையையும் அமைக்க திட்டமிட்டிருந்தார்.
அவரின் கனவு நனவாகும் படி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டெஸ்லா நிறுவனம் 24,565 சதுர அடி பரப்பில் கடந்த ஜூலை மாதத்தில் முதல் விற்பனையகத்தை திறந்தது. இதனை மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், டெஸ்லா காரின் முதல் விற்பனை இன்று துவங்கியது. ஏற்கனவே, பதிவு செய்திருந்த மகாராஷ்டிர போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக், முதல் டெஸ்லா காரை ஷோரூமில் இருந்து இன்று பெற்றுக் கொண்டார்.
A new milestone towards green mobility - proud to welcome Tesla home!@Tesla@purveshsarnaik
— Pratap Baburao Sarnaik (@PratapSarnaik) September 5, 2025
[ Pratap Sarnaik Tesla, Pratap Sarnaik new car, Tesla electric car Maharashtra, Pratap Sarnaik Tesla India, Green mobility Maharashtra, Tesla electric car India, Pratap Sarnaik… pic.twitter.com/W5Md2fSmqe
இதுகுறித்து பிரதாப் பாபுராவ் கூறுகையில், “டெஸ்லாவின் முதல் காரை வாங்கியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளேன். எந்த தள்ளுபடி விலையிலும் நான் இந்த காரை வாங்கவில்லை. முழுத் தொகையும் கொடுத்துதான் இந்த காரை வாங்கினேன்.
என்னுடைய பேரனை பள்ளியில் விடுவதற்காக இந்த காரை பயன்படுத்தப் போகிறேன். அப்போது நிறைய பேர் இந்த காரை பார்த்து மின்சார கார் வாங்க உக்குவிப்பேன்” என்றார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு தானே மாவட்டத்தில் சாதாரண ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக இருந்து, தானே மாவட்டத்தில் உள்ள ஓவாலா-மஜிவாடாவிலிருந்து நான்கு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதாப் பாபுராவ் சர்நாயக் இன்று டெஸ்லா காரின் உரிமையாளர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து அதிகளவில் வரிவிதித்து வருகிறார்.
இதற்கிடையில், அகமதாபாத் அருகே மாருதி சுசூகி வாகனத் தயாரிப்பு ஆலையில் மின்சார வாகன உற்பத்தியைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி, “நமது நாட்டு மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘சுதேசி பொருள்களை வாங்குவோம்’ என்ற பேச்சுக்கு “பாஜக அமைச்சரே ஒத்துப்போகவில்லையே மக்கள் எவ்வாறு இருப்பார்கள்?” என இணையதளவாசிகள் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.