சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!
சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இன்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார்.
பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோவ் நகரில், புதியதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்தப் புதிய சொத்துக்கு அவர் முறையாக வரி செலுத்தவில்லை எனவும், 40,000 பவுண்ட் அளவிலான பணத்தை மிச்சப்படுத்தியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரம், அந்நாட்டில் பெரும் பேசுப்பொருளான நிலையில், கடந்த செப்.3 ஆம் தேதி, தன் மீதான குற்றச்சாட்டுக்களை துணைப் பிரதமர் ரெய்னர் ஒப்புக்கொண்டார்.
தனியார் ஆலோசகர் லாவ்ரி மெக்னஸ் தலைமையிலான விசாரணையில் அரசு அமைச்சர்களுக்கான நெறிமுறைகளை அவர் மீறியுள்ளதாக, பிரதமர் கெயிர் ஸ்டார்மெரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஏஞ்சலா ரெய்னர் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, வெளிப்படையாகத் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் தலைவராக மக்களிடையே அறியப்படும் ஏஞ்சலா ரெய்னர், முறையாக வரி செலுத்தாத எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?