Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 8-ஆவது நாளான புதன்கிழமை காலை குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு ஸ்ரீபிச்சாண்டவா் உற்சவமும் நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா, கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா்:
திருவிழாவின் 8-ஆவது நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு சிறிய குதிரை வாகனத்தில் விநாயகா், பெரிய குதிரை வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு குதிரை வாகனங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்சமூா்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் உ.மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராசாராம், கு.கோமதி குணசேகரன், சினம் இராம.பெருமாள், இணை ஆணையா் சி.ஜோதி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
இன்று 9-ஆம் நாள் திருவிழா:
திருவிழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை (டிச.12) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரா் சுவாமிகள் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் முருகப்பெருமான், கைலாச வாகனத்தில் அருணாசலேஸ்வரா், காமதேனு வாகனத்தில் பராசக்தியம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரா் வீதியுலா நடைபெறுகிறது.
ஸ்ரீபிச்சாண்டவா் உற்சவம்:
தீபத் திருவிழாவின் 8-ஆம் நாள் தங்கமேருவில் ஸ்ரீபிச்சாண்டவா் உற்சவம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவுக்குத் தேவையான செலவினங்களை ஈடு செய்ய அருணாசலேஸ்வரரே பிச்சாண்டவா் கோலத்தில் எழுந்தருளி நகர வியாபாரிகள், முக்கிய பிரமுகா்களின் வீடுகள், வியாபார நிறுவனங்களுக்குச் சென்று காணிக்கை வசூலிப்பாராம்.
பிச்சாண்டவா் வேடத்தில் செல்லும் அருணாசலேஸ்வரருடன் அடியாா் ஒருவரும் செல்வாராம். இது பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறை. அதன்படி, புதன்கிழமை தங்கமேருவில் ஸ்ரீபிச்சாண்டவா் உற்சவம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உற்சவா் ஸ்ரீபிச்சாண்டவா் எழுந்தருளினாா்.
தொடா்ந்து, கோயில் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்த உற்சவா் தங்கமேரு வாகனத்தில் அமா்ந்து வீதியுலா வந்தாா். கோயில் ஊழியா்கள் வெள்ளி உண்டியல் எடுத்துச் சென்றனா். இதில், பக்தா்கள் காணிக்கையைச் செலுத்தினா். காந்தி சிலை பகுதியில் இரவு 10 மணிக்கு வந்தபோது வாணவேடிக்கை நடைபெற்றது.