Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
தீபாவளி: காளி பூஜை, எமனுக்கு விளக்கு, முன்னோர் வழிபாடு; இந்தியா முழுவதும் வேறுபடும் கொண்டாட்டம்!
இந்திய மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகப் பெரிய பண்டிகை தீபாவளி. இந்தத் துணைக்கண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கலாசாரத்திலும் இந்த ஒளியின் திருவிழா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பொதுவாக பார்க்கும்போது அலங்காரமும், பட்டாசும், விருந்தும், இனிப்பும் தீபாவளியாகத் தெரிந்தாலும் இது கதைகளால் ஆன விழா!
ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம் தனித்துவமானது. இந்தியாவின் கலாசார பரப்பளவு எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டுள்ளது என்பதற்கு தீபாவளிப் பண்டிகை ஒரு எடுத்துக்காட்டு.
பொதுவாக வட இந்தியாவில், ராமர் அயோத்திக்கு 14 ஆண்டு வனவாசத்தை நிறைவு செய்து திரும்பும் நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலர் செல்வ செழிப்புக்காக லக்ஷ்மி மற்றும் ஞானத்துக்காக விநாயகரையும் வணங்குகின்றனர்.
தென்னிந்தியாவில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாக தீபாவளி நம்பப்படுகிறது.
ஹிமாச்சல்
உத்ராகண்ட் மலைப்பகுதிகளிலும் ஹிமாச்சலிலும் தீவாளிக்குப் (தீபாவளியை தீவாளி என்றும் அழைக்கின்றனர்) பிறகான அம்மாவாசையில் பூதி தீவாளி (Bhudi Diwali) கொண்டாடப்படுகிறது. ராமர் அயோத்திக்குத் திரும்பிய செய்தி மலைப் பகுதிகளில் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதனால் இந்த விழா கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.
தேவதாரு மரங்களின் கிளைகளை எரித்து, மத்தாப்புகள் கொழுத்தி, விளக்கு வைத்து, நெருப்பின் முன் ஆடிப்பாடி கொண்டாடுகின்றனர்.
உத்தராகண்டில் உள்ள உதம் சிங் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தாரு பழங்குடி மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. அதை அபசகுணமாகக் கருதுவதுடன் அந்த நாளில் தங்கள் மூதாதையரை வணங்குகின்றனர்.
மகாராஷ்டிரா
தீபாவளியை ஒட்டி மகாராஷ்டிரா மக்கள் சிறிய தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். நரக சதூர்த்தி என்ற பாரம்பர்ய விழா, கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே எண்ணெய் தேய்த்து குளித்து, வீடுகளைச் சுத்தம் செய்து, இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். இதற்காக சக்லி மற்றும் அனார்சா ஆகிய பாரம்பர்ய இனிப்புகளைச் சமைக்கின்றனர்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. இரவில் காளி தேவிக்கு இனிப்புகள், மலர்கள், பழங்கள் படைத்து வழிபடுகின்றனர். ரசகுல்லா மற்றும் சந்தோஷ் ஆகிய இனிப்புகளை விரும்பி படைக்கின்றனர்.
வீடுகளை அலங்கரித்து தியாஸ் விளக்கு ஏற்றுகின்றனர். தீபாவளிக்காக பட்டாசுகள் வெடித்தாலும் காளி பூஜையில் பட்டாசு வெடிக்கும் பகுதி இல்லை. பல இடங்களில் பந்தல்கள் அமைத்து காளி தேவியின் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர்.
கர்நாடகா மற்றும் தென்னிந்தியா
கர்நாடகாவில் நரகாசுரனை வீழ்த்தியதாக சத்யபாமாவின் சிலை வைத்து தீபாவளி கொண்டாடப்படுகிறது.
சில தென்னிந்திய மாநிலங்களில் கிருஷ்ணர் நரகாசுரனை வீழ்த்திவிட்டு தன்மேல் படிந்திருந்த ரத்தத்தைப் போக்க எண்ணெய் தேய்த்து குளித்ததை நினைவுபடுத்தும் விதமாக எண்ணெய் தேய்த்து குளிப்பதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் ஓணம் மிகப் பெரிய விழாவாகவும் தீபாவளி சிறிய அளவிலும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆன தம்பதியர் 'தல தீபாவளியைக்' கொண்டாடுவதற்காக மணமகளின் வீட்டுக்கு வருகை தருகின்றனர்.
வடகிழக்கு இந்தியா
வடகிழக்கு இந்தியாவில் தீபாவளி அன்று வீட்டின் தென் திசையில் விளக்கு ஏற்றி வைக்கின்றனர். தெற்கு எமன் வரும் திசை என்பதனால் இப்படி விளக்கு வைத்து எமனிடம் வேண்டும்போது அகால மரணம் வராது என்பது அவர்களின் நம்பிக்கை.
திரிபுராவில் திஹார் என்ற தனித்துவமான கொண்டாட்டத்தை மேற்கொள்கின்றனர். இதன்படி வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் விளக்கு வைத்து 5 நாட்கள் எமனை வணங்குகின்றனர்.
ஒடிசா
கிட்டத்தட்ட பெரும்பாலான இந்தியர்களைப் போலவே ஒடிசா மக்களும் தீபாவளி கொண்டாடுகின்றனர். ஆனால் ஒரு சிறிய சடங்கு மட்டும் மாறுபடுகிறது. அது கடவுள் ஜெகன்நாதருடன் தொடர்புடையது.
Bada Badua Daka என்றால் மூத்த முன்னோர்களை அழைப்பது என்று பொருள். அதாவது இறந்த முன்னோர்களிடம் ஆசி பெறுவதற்காக பல நூற்றாண்டுகளாக இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
பஞ்சாப்
பஞ்சாபில் சீக்கிய மக்கள் தீபாவளி தினத்தன்று பந்தி சோர் திவஸ் (Bandi Chhor Divas) என்னும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். வீடுகளில் விளக்கேற்றிக்கொண்டாடுகின்றனர்.
இவ்வாறாக ஒவ்வொரு இந்திய கலாசாரமும் ஒவ்வொரு வகையில் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். அதனால்தான் தீபாவளி என்றாலே மொத்த இந்தியாவிலும் வண்ணமயமான வானத்தையும் மனங்களையும் பார்க்கமுடிகிறது.