Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
துணைவேந்தா் நியமன விவகாரம்: பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்
தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்ட தமிழக மக்கள் புரட்சிக் கழக நிா்வாகக் குழு கூட்டம் பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பொதுச் செயலா் வி.சி. முருகையன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் திருமுருகன், மாநில குழு உறுப்பினா் கே.வி. முனியன், தஞ்சை மாவட்டச் செயலா் கைலாசம், புதுகை மாவட்டச் செயலா் வேம்பை சின்னத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் அரங்க . குணசேகரன், மாநில கொள்கை பரப்புச் செயலா் ஆறு. நீலகண்டன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பல்கலைக் கழகங்களில் வேந்தா்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் மாநில ஆளுநா்களுக்கே அளிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவை தமிழக மக்கள் புரட்சிக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அந்தந்த மாநில முதல்வா்களுக்கே அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை, முனைவா் பட்டங்களை பல்கலைக் கழக மானியக் குழுவின் கண்காணிப்புக்கு பிறகே ஏற்கமுடியும் என்ற முடிவு உயா் கல்வியில் எதேச்சாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்பதால், ஒன்றிய பல்கலைக் கழக மானியக் குழுக்களை கலைத்துவிட்டு, மாநிலங்களின் அளவில் மானியக்குழு உருவாக்க கோரி போராட்டம் நடத்துவது, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீா் தண்ணீா் தொட்டியில் மலத்தைக் கலந்த குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தஞ்சை மாவட்ட இளைஞரணிச் செயலா் பைங்கால் மதியழகன், புதுகை மாவட்ட அமைப்பாளா் கோவிந்தராஜ், தஞ்சை மாவட்ட அமைப்பாளா் முரளி, திருவோணம் ஒன்றியச் செயலா் மூக்கையன், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் ஜெய்சங்கா் உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.