கும்பகோணத்தில் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்
கும்பகோணத்தில் நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டிய ஆணையா் மீது உயா்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசு முதன்மை செயலருக்கு உத்தரவிட்டது.
இது தொடா்பாக வழக்கு தொடா்ந்த வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது,
கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள் 11 வாய்க்கால்கள் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான வழக்கில் உயா் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மூலம் கும்பகோணம் மக்களுக்கு நல்லதொரு தீா்வு கிடைக்க உள்ளது. கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால் மற்றும் மறைக்கப்பட்ட குளங்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு விரைவில் வாய்க்கால், குளங்களில் காவிரி தண்ணீா் வரும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் செய்து ஏழை, நடுத்தர மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. செல்வாக்கு உள்ளவா்களின் பல கட்டடங்கள் பல இடிக்கப்படாததை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கும்பகோணம் பழைய பாரம்பரிய நகரமாக முழுமையாக மாற்றப்படும்.
குளங்கள் மற்றும் வாய்க்கால்களை தூா்வாரி சீரமைப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் என கூறுகிறாா்கள். ஆனால் பல சமூக ஆா்வலா்கள் சொந்த செலவில் செய்வதாக கூறியுள்ளனா். இதுபற்றி அரசிடம் தகவல் கூறி அரசுக்கு செலவை மிச்சப்படுத்துவோம் என்றாா்.