பட்டதாரி பெண்ணை வேட்டையாடிய சிறுத்தை - உடலை வாங்க மறுத்து போராட்டம்... வன கிராம ...
துபாய் எனக் கூறி கராச்சிக்கு கடத்தல்; 22 ஆண்டுகள் போராடி பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய பெண்!
மும்பையில் உள்ள குர்லா என்ற இடத்தில் இருக்கும் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர் ஹமீத் பானு (75). டிராவல் ஏஜெண்ட் ஒருவர் மூலம் ஹமீத் பானு துபாய் சென்றார். ஆனால் துபாய் சென்றவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. ஹமீத் பானு பாகிஸ்தானில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்தார். ஒரு முறை பாகிஸ்தானில் உள்ள யூடியூபர் மரூப் என்பவரிடம் தனது கதையை ஹமீத் தெரிவித்தார். அதனை வீடியோவாகத் தயாரித்து தனது யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த மும்பையைச் சேர்ந்த யூடியூபர் குல்பான் ஷேக், அவரின் குடும்பத்தைக் கண்டுபிடித்தார். இதையடுத்து இரண்டு பேரும் சேர்ந்து இது குறித்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அப்பெண் குறித்த விவரங்களைத் தெரிவித்தனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவரிடம் இருந்த இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைப் பெற்று மும்பை குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றப்பிரிவு போலீஸார் மும்பையில் உள்ள ஹமீத் பானுவின் வீட்டிற்கு சென்று அவர் குறித்த விவரங்களைச் சேகரித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. ஹமீத்தை கராச்சியில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வந்தனர். அங்கிருந்து கார் மூலம் வாஹா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹமீத், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் வாஹா எல்லை வரும் வரை மரூப் கூடவே வந்து வழியனுப்பி வைத்தார். அதோடு அவருக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தார். 22 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஹமீத் பானு மும்பையில் உள்ள தனது குடும்பத்தோடு சேர்ந்துள்ளார்.
தனது குடும்பத்தோடு மீண்டும் சேர்ந்துள்ள ஹமீத் பானு இது குறித்து அளித்த பேட்டியில், ''நான் மீண்டும் இந்தியாவிற்கு வருவேன் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன். மரூப் மற்றும் ஷேக்கிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னை கெளரவத்துடன் எனது குடும்பத்தோடு சேர்த்து வைத்தனர். மும்பையில் உள்ள எனது வீட்டை சுற்றிய பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நான் தனியாக வந்திருந்தால் எனது வீட்டை என்னால் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்காது. அதிர்ஷ்டவசமாக எனது குடும்பம் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லவில்லை. துபாயில் வேலை என்று சொல்லி என்னை அழைத்துச் சென்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் இறக்கிவிட்டனர்.
அங்கிருந்து கராச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னை அவர்கள் ஒரு வீட்டில் மூன்று மாதம் அடைத்து வைத்திருந்தனர். எனது பாஸ்போர்டை பிடுங்கி வைத்துக்கொண்டனர். அங்கிருந்து என்னுடன் இருந்த பெங்களூரு பெண் ஒருவருடன் தப்பித்தோம். அதிகமான நாட்கள் தெருக்களிலும், மசூதிகளிலும் வாழ்ந்தேன். சில காலம் சிறிய கடை நடத்தினோம். அதன் பிறகு பொம்மை விற்பனை செய்யும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்தேன். அவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பாகிஸ்தானில் வளர்ப்பு மகனுடன் வசித்து வந்தேன்'' என்றார்.