முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
துரை வைகோ Vs மல்லை சத்யா: வெடித்துக் கிளம்பிய உட்கட்சி பஞ்சாயத்து!
ம.தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் திருச்சி தொகுதியின் எம்.பி-யுமான துரை வைகோ, இன்று (ஏப்ரல் 19-ம் தேதி) வெளியிட்டிருக்கும் விரிவான அறிக்கையில், "அரசியல் பொதுவாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்' என்ற தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.


வரும் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்துக்கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவுகூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அதேநேரத்தில், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என பட்டாசை வெடித்திருக்கிறார் துரை வைகோ.
அவரது அறிக்கையைத் தொடர்ந்து, 'கட்சித் தலைமையின் மீது தீராத பழி சுமத்தி சுகம் காணும் அந்த ஒருவர் யார்..?' என்கிற விவாதம் சூடுபறக்கிறது. அந்த ஒருவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாதான் என்கிறார்கள் ம.தி.மு.க-வின் சில மாவட்டச் செயலாளர்கள்.
துரை வைகோ Vs மல்லை சத்யா
ம.தி.மு.க-விற்குள் எழுந்துள்ள மோதல் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசியவர்கள், "வைகோவுக்குப் பிறகு கட்சி தன்னிடம்தான் வருமென நீண்ட காலமாகவே எதிர்பார்ப்புடன் இருந்தார் மல்லை சத்யா. அதற்கேற்ப அவருடைய உழைப்பும் இருந்ததை மறுக்க முடியாது. ஆனால், 'திடீர் என்ட்ரியாக துரை வைகோ தீவிர அரசியலுக்குள் வருவார், கட்சியின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்பார்' என அவர் எதிர்பார்க்கவில்லை. கட்சியில், மல்லை சத்யாவுடன் சேர்த்து செஞ்சி ஏ.கே.மணி, திருமலாபுரம் ராஜேந்திரன், ஆடுதுறை முருகன், டாக்டர்.ரொஹையா என ஐந்து பேர் துணைப் பொதுச் செயாளர்களாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் துரை வைகோவை தங்களுடைய தலைவராக ஏற்றுக் கொண்டாலும், மல்லை சத்யா மட்டும் ஏற்கவில்லை. அவைத் தலைவரான ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், பொருளாளரான செந்திலதிபன் உள்ளிட்ட சீனியர்களும்கூட துரை வைகோவை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், துரை வைகோவை ஏற்காத மல்லை சத்யா, தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து தனியே போஸ்டர்கள், விளம்பரங்கள் செய்து கொள்வது. அந்த விளம்பரங்களில் வைகோவுக்கு அடுத்தபடியாக தன்னுடைய படத்தை பெரிதாகவும் துரை வைகோவின் படத்தை சிறியதாகவும் போட்டுக் கொள்வதென சீண்டி வந்தார். இதையெல்லாம் துரை வைகோ தரப்பு சுத்தமாக விரும்பவில்லை. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழு, கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடந்தது. அதில், தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளராக ஆவடி அந்தரிதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய சில நிர்வாகிகள், 'நிர்வாக பதவிகள் சாதியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன' என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினர். மேடையிலிருந்த துரை வைகோ கடுப்பாகி, 'கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசக்கூடாது. அமைதியாக உட்காருங்கள்..' என்றார். ஆனால், அந்த நிர்வாகிகள் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. கடுப்பான துரை வைகோ, பொதுக்குழுவிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். தலைமை மீது குற்றஞ்சாட்டியவர்களை மல்லை சத்யாதான் தூண்டிவிட்டதாக கட்சிக்குள்ளேயே பேச்சு எழுந்தது.
தனி ஆவர்த்தனம் செய்கிறாரா மல்லை சத்யா?
பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் தந்தை குமரி ஆனந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைகோ சென்றிருந்தார். அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டியும் அளித்தார். அவருக்குப் பிறகு அஞ்சலி செலுத்தச் சென்ற மல்லை சத்யா, அத்தோடு கிளம்பியிருக்கலாம். அவரும் தன்னிச்சையாக பேட்டியளித்தது, 'தலைவர்தான் பேட்டி கொடுத்துவிட்டாரே.. அதன்பிறகு ஒரு நிர்வாகி பேட்டியளிப்பது சரியாக இருக்குமா.. தனி ஆவர்த்தனம் செய்கிறாரா மல்லை சத்யா?' என்கிற விவாதத்தையும் கட்சிக்குள் எழுப்பியது. இந்தச் சூழலில்தான், பல்வேறு மாவட்ட அமைப்புகளிலும், 'கட்சிக்கு துரோகம் இழைப்பவர்களை வெளியேற்ற வேண்டும்' என தீர்மானங்கள் இயற்றப்பட்டன. திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் நடந்த அவசரக் கூட்டத்தில், 'முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து அண்ணன் துரை வைகோ வெளியேற போவதாக செய்திகள் வருகின்றன. அவர் அப்படியொரு முடிவை எடுத்தால், ஒட்டுமொத்த திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தையும் கலைத்துவிட்டு, நாங்களும் தொண்டராக செயல்படுவோம்' என தீர்மானமே இயற்றினர். இவையெல்லாம், கடந்த சில வாரங்களாக பெரும் புயலையே ம.தி.மு.க-வுக்குள் கிளப்பின.

இந்தச் சூழலில்தான், மல்லை சத்யாவை கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பது தொடர்பாக வைகோவிடம் பேசியிருக்கிறார் துரை வைகோ. அதற்கு வைகோ உடன்பட மறுக்கவே, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நாளை (ஏப்ரல் 20-ம் தேதி) கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில், துரை வைகோவின் ராஜினாமா குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். துரை வைகோவை சமாதானப்படுத்தும் முயற்சியில் வைகோவும் சில சீனியர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், 'மல்லை சத்யாவை பொறுப்பிலிருந்து நீக்கியே ஆக வேண்டும்' என துரை வைகோ விடாப்பிடியாக இருப்பதால், கட்சிக்குள் அனல் வீசுகிறது" என்றனர் விரிவாகவே.
அப்படியென்ன கோபம்?
"இந்தளவுக்கு, மல்லை சத்யா மீது துரை வைகோவுக்கு அப்படியென்ன கோபம்..?", கேள்வியுடன் ம.தி.மு.க-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "மதுராந்தகம் ஆறுமுகத்தினால் வைகோவிடம் அறிமுகமானவர்தான் மல்லை சத்யா. 1993-ம் ஆண்டிலிருந்து வைகோவுடன் தொடர்ச்சியாக பயணமாகி வருகிறார். குங்பூ, கராத்தே பயிற்சி பெற்றவரான சத்யாவை வம்பு சண்டைக்கெல்லாம் போகவிடாமல், அரசியல்ரீதியாகப் பக்குவப்படுத்தியவர் வைகோதான். 1996-ல், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பொறுப்பு சத்யாவுக்கு வைகோவினால்தான் கிடைத்தது. இந்தக் கட்சியில், அதிகமுறை சீட் பெற்றவர்களுள் சத்யாவும் ஒருவர். செங்கல்பட்டு, எழும்பூர், திருப்போரூர், மதுராந்தகம் என ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தொகுதிகளை மாற்றிப் பார்த்தும் அவர் வெற்றிப்பெறவில்லை. 2014-ல், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக்கினார் வைகோ. அப்போதும் வெற்றிப்பெறவில்லை. இந்தச் சூழலில், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் சீட் பெற இப்போதிருந்தே காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார் மல்லை சத்யா. அதை துரை வைகோ ஏற்கவில்லை என்பதுதான் பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டது.
'தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவுபவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு ஒதுக்கப்படும் சீட்டில், இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாமே...' என துரை வைகோ கட்சித் தலைவரிடம் கேட்கப் போக, அது பஞ்சாயத்தாகிவிட்டது. சமீபத்தில், தி.மு.க மேலிட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மல்லை சத்யா தரப்பிலிருந்து சந்தித்தவர்கள், தி.மு.க-வில் சேர்வது குறித்துப் பேசியிருக்கிறார்கள். அதற்கு, 'கூட்டணிக் கட்சியாக இருக்கிறீர்கள். இந்தச் சூழலில், நீங்கள் அங்கிருந்து இங்கே வருவது சரியாக இருக்காது. உங்கள் கட்சித் தலைமையின் ஒப்புதலோடு வருவதாக இருந்தால் சொல்லுங்கள், தி.மு.க தலைமையிடம் பேசிப் பார்க்கலாம்...' என்றிருக்கிறார் அந்த மேலிட குடும்பப் பிரமுகர். இவையெல்லாம் துரை வைகோவின் காதுக்குச் சென்றவுடன், அவர் டென்ஷனாகிவிட்டார். அதன் வெளிப்பாடுதான் இந்த முட்டல் மோதல்" என்கிறார்கள்.
பரபரப்பான சூழலுக்கு இடையே, ம.தி.மு.க-வின் நிர்வாகக் குழு கூட்டம், கட்சியின் தலைவரான வைகோவின் தலைமையில் நாளை நடைபெறவிருக்கிறது. 'மல்லை சத்யாவை பொறுப்பிலிருந்து நீக்கியே ஆக வேண்டும்' என விடாப்பிடியாக நிற்கிறது துரை வைகோ தரப்பு. 'நீக்கம்தான் முடிவென்றால், நாங்களும் தடாலடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும். அந்தச் சூழலுக்குள் கட்சித் தலைவர் எங்களை தள்ளிவிட மாட்டார்..' என பதிலுக்கு முறுக்குகிறது மல்லை சத்யா தரப்பு. 'மகனா.. மல்லை சத்யாவா...', என்ன முடிவெடுக்க போகிறார் வைகோ என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.