சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா
துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவில் இருந்து வெளியேற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்று துணை பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றம்சாட்டியிருக்கிறார்.
முன்னதாக, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார், பல போராட்டங்களில் என்னுடன் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது என்று, வைகோ குறிப்பிட்டிருந்தார்.
மதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் மல்லை சத்யா கட்சியிலிருந்து வெளியேறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு எதிராக வைகோவும் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
ஏற்கனவே, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ - துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்டு, அதன் எதிரொலியாக மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்தார். பிறகு வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
ஆனால், தற்போது, அந்த மோதல் எரிமலை போல வெடித்துச் சிதறியிருக்கிறது. வைகோ பேசியிருக்கும் கருத்துகள் குறித்து பதிலளித்த மல்லை சத்யா, வைகோ சொன்ன வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாது வேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார்.
இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார் என்று கூறியிருக்கிறார்.
துரை வைகோ - மல்லை சத்யா இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அது உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், வைகோவும், மகன் பக்கம் சாய்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மதிமுகவிலிருந்து வெளியேறி மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குவார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.