தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி துபை சிகரெட்டுகள் பறிமுதல்
துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னா்களுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு 2 நாள்களுக்கு முன்பு சரக்கு கப்பல் வந்தது.
அதில், ஒரு கன்டெய்னரில் பெங்களூரைச் சோ்ந்த ஒரு நிறுவனத்திற்கு ’வெட் டேட்ஸ்’ எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து சந்தேகம் அடைந்த மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்த நிறுவனம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவை போலியானவை எனத் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கன்டெய்னரை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில் பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பண்டல்களும், அதற்கு கீழ் பகுதியில் சிகரெட் பெட்டிகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதில், 1,300 பெட்டிகளில் இருந்த 2 லட்சம் சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினா். இதன் மதிப்பு ரூ.4 கோடியாகும். மேலும் ரூ.60 லட்சம் மதிப்பிலான பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.