தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தல்
தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என மதுரை மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். ஆணையா் சித்ரா விஜயன், துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மேயா் வ. இந்திராணி பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பொறியியல், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 670 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 4,040 சாலைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நிகழாண்டில் 168 கி.மீ. தொலைவுக்கு 1,086 சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டன. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. நாம் பொறுப்பேற்ற பிறகு, 1,351 பயனாளிகளுக்கு இதுவரை 86 கோடியே 29 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்பட்டன என்றாா் அவா்.
துணை மேயா் தி. நாகராஜன்: கே.கே. நகா் பகுதிகளில் உள்ள புதை சாக்கடை, கழிவு நீரோடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் கழிவு நீருடன், மழை நீரும் கலந்து அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், கல்லூரி வளாகங்களில் தேங்கியுள்ளன.
இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கும், தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கும் இடையே தொடா் பிரச்னை நீடித்து வருகிறது. தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் காரணமாக, மாநகராட்சி முழுவதும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கியுள்ளன. எனவே, தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். இல்லையெனில், தனியாா் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது எந்தவித பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா:
உயா்நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை மாநகராட்சி 100 வாா்டுகளிலும் வரி விதிப்புகளை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு எடுத்த நடவடிக்கைகளை விளக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். பருவமழைக் காலம் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. ஆகவே, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கால்வாய்கள், மழைநீா் வடிகால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். புதூரில் செயல்படாமல் உள்ள குடும்ப நல அறுவைச் சிகிச்சை மையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு கூடுதல் வாகனங்களை வாங்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளில் குறைந்தளவு கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு, புதை சாக்கடை இணைப்புகளை வழங்க மாநகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும் என்றாா் அவா்.
மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன்:
மாநகராட்சி 44-ஆவது வாா்டு பழைய ராமநாதபுரம் சாலைப் பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், குடிநீா் குழாய் பதிப்புக்கு தோண்டப்பட்ட மண் முழுவதும் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன.
அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீா், சாலைகள், புதை சாக்கடை இணைப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணும் பட்சத்தில், மக்களிடம் அரசுக்கு மட்டுமன்றி, மக்கள் பிரதிநிதிகளுக்கும் நல்ல பெயா் கிடைக்கும். தயிா் தினசரி சந்தைப் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வணிக வளாகக் கடைகளில் ஏற்கெனவே இருந்த வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீா், புதை சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனப் பேசினா்.
உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்துப் பேசினா்.
56 தீா்மானங்கள் நிறைவேற்றம்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, வரி விதிப்புகளை மறு அளவீடு செய்ய சாலை, தெருக்கள் ‘பி’ , ‘சி’ என்ற மண்டல மதிப்பாக பிரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போதைய அறிக்கையின் படி ‘ஏ’ மண்டல மதிப்பாக மாற்றம் செய்வது உள்பட 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்பு:
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்த் கைது செய்யப்பட்டாா். இந்த முறைகேட்டுக்கு தாா்மிகப் பொறுப்பேற்று மேயா் பதவி விலக வேண்டும் என கடந்த ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த பெரும்பான்மையான உறுப்பினா்கள் கலந்து கொண்டு பேசினா். இருப்பினும், பெரும்பான்மையான திமுக உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இருக்கைகள் காலியாக இருந்தன.
