தெற்கு மத்திய ரயில்வேயில் 1,839 பணியிடங்கள் குறைப்பு
தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட 88,000-க்கு மேற்பட்ட பணியிடங்களில் 2 சதவீதமான 1,839 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் குறைக்கப்படுகின்றன.
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14.40 லட்சம் பணியிடங்களில் 28,816 பணியிடங்களை (2 சதவீதம்) குறைக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் கடந்த மே மாதம் கடிதம் எழுதியிருந்தது.
நாட்டிலேயே அதிகபட்சமாக 1,62,142 பணியிடங்களைக் கொண்ட வடக்கு ரயில்வே 3,243 பணியிடங்களையும், 1,26,418 பணியிடங்களைக் கொண்ட கிழக்கு ரயில்வே 2,528 பணியிடங்களையும் குறைக்க வேண்டியுள்ளது.
தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் குறைக்கப்பட வேண்டிய 1,839 பணியிடங்களை கோட்டங்கள் மற்றும் பிரிவுகள் வாரியான பட்டியலாக சமா்ப்பிக்குமாறு பல்வேறு துறைத் தலைவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தெற்கு மத்திய மண்டலத்தில் உள்ள 6 கோட்டங்களில் ஒன்றான செகந்தராபாத் கோட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 476 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன.
கடந்த நிதியாண்டில் ரயில்வே வாரியம் மற்றும் மண்டல ரயில்வே பொது மேலாளா்களுக்கு இடையே கையொப்பமான வருடாந்திர செயல்திறன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.