பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
``தேசத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - கஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம்
ஜம்மு கஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டஹ்தில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் பெயர்களைப் படித்த ஜம்மு - கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, 'ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க அழுத்தம் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தப் போவதில்லை" என உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஜம்மு கஷ்மீரின் துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அதில், ``பயங்கரவாதச் செயல்கள் காஷ்மீரின் நெறிமுறைகள், நமது அரசியலமைப்பின் மதிப்புகள், ஜம்மு - காஷ்மீரிலும், நமது தேசத்திலும் நீண்ட காலமாக தொடரும் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மீதான நேரடித் தாக்குதல்.
அதே நேரத்தில், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் சமூக ஊடக இடுகைகளுக்கும், சில குறிப்பிட்ட அமைப்புகளின் தொடர் வெறுப்பு பிரசாரத்துக்கு எதிராகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நாட்டு மக்களை வலியுறுத்துகிறோம்.
பஹல்காமில் நடந்த இந்தத் தாக்குதல், முதன்முறையாக, ஜம்முவில் உள்ள கதுவா முதல் காஷ்மீரில் உள்ள குப்வாரா வரையிலான மக்களை ஒன்றிணைத்துள்ளது.
அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் முழு ஒத்துழைப்பையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற துணிச்சலுடன் முயன்று, தனது உயிரைத் தியாகம் செய்த ஷாஹீத் சையத் அடில் ஹுசைன் ஷாவின் உச்சபட்ச தியாகத்திற்கு இந்த அவை வணக்கம் செலுத்துகிறது.
அவரது துணிச்சலும் தன்னலமற்ற குணமும் காஷ்மீரின் உண்மையான உணர்வை வெளிப்படுத்துகின்றன. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாகவும் அவரது தியாகம் மாறியிருக்கிறது.
தீவிரவாத சம்பவத்துக்குப் பிறகு நகரங்களிலும், கிராமங்களிலும் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களும், சுற்றுலாப் பயணிகளுக்கு தன்னிச்சையாகக் கிடைத்த தார்மீக ஆதரவும், அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மக்களின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
இந்த தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு அறிவித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்த தீர்மானம் மூலம் முழு ஒப்புதல் அளிக்கிறது இந்த அரசு.
ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் அல்லது பயணம் செய்யும் காஷ்மீர் மாணவர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
தேசத்தின் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மத நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க முயல்பவர்களின் தீய நோக்கங்களை உறுதியாகத் தோற்கடிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
