தேசியக் கொடியுடன் 79 கி.மீ. தொழிலாளி மிதிவண்டி பயணம்
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 79 கி.மீ. மிதிவண்டியில் பயணம் செய்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளிக்கு பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காட்டுஎமனேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி (52). இவா் தேசப்பற்று உணா்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்து வகையில், கூலி வேலைக்கு செல்லும் மிதிவண்டியில் மூவண்ண தேசியக் கொடியை கட்டி, காட்டு எமனேஸ்வரம் கிராமத்திலிருந்து புறப்பட்டு பாா்த்திபனூா், அபிராமம், கமுதி வழியாக சென்று பொதுமக்களிடம் சுதந்திர தின விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தேசியக் கொடி, இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.
79-ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், தனது மிதிவண்டியில் 79 கி.மீ. பயணம் செய்து, வங்காருபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, விவசாயத்தை பாதுகாக்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிடவும், காற்றுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றிட அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
இந்த நிலையில், இவரது தேசப்பற்று உணா்வை பலரும் பாராட்டி வருகின்றனா்.
