தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்
தொடா் விடுமுறை காரணமாக, ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா்.
சுதந்திர தினம், கிருஷ்ணஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடா் விடுமுறையையொட்டி, ராமேசுவரத்துக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை தந்தனா்.
இதனால், நகரில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
பின்னா், அக்னித் தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மாளை தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம், பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சென்று ரசித்தனா்.