வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது: ராகுல் காந்தி
வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று வாக்குரிமைப் பேரணி தொடக்கவிழாவில் ராகுல் காந்தி பேசினார்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்தநிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை இன்று(ஆக. 17) தொடங்கியுள்ளன.
‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, இன்றுமுதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா்.
இதன் தொடக்க விழாவில் மேடையில் பேசிய ராகுல் காந்தி: “மகாராஷ்டிரத்தில் இண்டி கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டன. ஆனால், தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்த்து. அதிலும், பாஜகவுக்கு ஒரு கோடி புதிய வாக்காளர்கள் கிடைத்தனர்.
உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த நாட்டிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்னும் பெயரில், அவர்கள் புதிய வாக்காளர்களை சேர்க்க விரும்புகிறார்கள். அதன்மூலம், வாக்குகளை திருடுகிறார்கள். பிகாரில், வாக்குத் திருட்டை அனுமதிக்கமாட்டோம்” என்றார்.