பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!
பிகாரில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மெகா பேரணி தொடங்கியது.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்தநிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை இன்று(ஆக. 17) தொடங்கியுள்ளன.
பிகாரின் சசாரத்தில் நடைபெற்ற விழாவில், பகல் 2.30 மணியளவில் மூவண்ணக் கொடியசைத்து மேடையில் நின்ற தலைவர்கள் பேரணியை தொடக்கி வைத்தனர்.
இன்று தொடங்கும் இந்த ‘வாக்குரிமைப் பேரணி’, 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20 அதிகமான மாவட்டங்கள் வழியாகச் செல்ல உள்ளது. செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் பேரணி நிறைவடைய உள்ளது.