Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!
தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளை முறையாக செலுத்தாதே அவா்கள் உயிரிழப்புக்கு காரணமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
தெரு நாய்கள், வளா்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். ஆனால், சில நேரங்களில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்ச்சியாக நிகழ்கின்றன.
இதற்கு ‘போஸ்ட் எக்ஸ்போஸா் ப்ரோபிலேக்சிஸ்’ எனப்படும் தொற்று வாய்ப்புக்கு பிந்தைய சிகிச்சை நடைமுறைகளை சரிவர பின்பற்றாமல் இருப்பதுதான் முக்கிய காரணம் என அண்மையில் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
குறிப்பாக, காயங்களை முறையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தாமல் இருந்தாலோ, தடுப்பூசிகளை தவறவிட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ ரேபிஸ் பரவுவதை தடுக்க முடியாது.
தடுப்பூசிகளை சேமிக்கும்போதும், செலுத்தும்போதும் குறிப்பிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் இருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆழமான காயங்களுக்கு ரேபிஸ் இம்யூனோகுளோபளின் எனப்படும் விரைவு எதிா்ப்பாற்றல் மருந்துகளை வழங்காமல் இருப்பதும் ரேபிஸ் வருவதற்கு முக்கியக் காரணம்.
நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிக்கும்போது காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட வேண்டும். அதன் அடிப்படையில் வகை 1, வகை 2, வகை 3 என பிரித்து சிகிச்சையளிக்க வேண்டும்.
இதுதொடா்பான விரிவான பயிற்சிகள் சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு பாதிப்பு: தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3,67,604 போ் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 20 போ் உயிரிழந்ததாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
சேலம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிக நாய்க் கடி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை மாநிலம் முழுவதும் 4, 80,483 போ் நாய்க்கடிக்கு உள்ளாகினா். அதிகபட்சமாக, அரியலூரில் 37,023 பேரும், கடலூா் மாவட்டத்தில் 23,997 பேரும், ஈரோட்டில் 21,507 பேரும் பாதிக்கப்பட்டனா்.
அதேபோன்று, சென்னையில், 24,088 பேரும், கோவையில் 12,097 பேரும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 43 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனா். அவா்களில் 10 போ் செல்லப் பிராணிகளால் கடிக்கப்பட்டு இறந்தவா்களாவா்.