Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
Tollywood: நடிகர்களுக்கு கோடிகளில் சம்பளம்; ஆனால், தொழிலாளர்களுக்கு? - வேலைநிறுத்தப் பின்னணி என்ன?
தெலுங்கு சினிமாவின், திரைத்துறை தொழிலாளர் கூட்டமைப்பு (TFIEF) நடத்தும் வேலைநிறுத்தம் நேற்று 13-வது நாளை தொட்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு எப்படி ஃபெப்சி அமைப்பு இருக்கிறதோ அதுபோல, தெலுங்கு சினிமாவுக்கு இந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
சினிமா துறையின் அத்தனை 24 பிரிவுகளுக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்ததே இந்த அமைப்பு. படப்பிடிப்பு தளப் பணியாளர்கள், லைட்மேன், ஒப்பனை கலைஞர்கள், ஃபைட்டர்ஸ் என 24 துறைகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கியது இந்த அமைப்பு.

இதற்கு முன்பும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக சில செயல்பாடுகளை இந்த அமைப்பு கையில் எடுத்திருக்கிறது. இப்போதும் 30 சதவிகிதம் கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது இந்த அமைப்பு.
தெலுங்கு சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் இதுதான் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி TFIEF-அமைப்பு என்னென்ன கோரிக்கைகளை வைத்தது, தயாரிப்பாளர்கள் எதற்காக இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறார்கள் என்று பார்ப்போமா...
தொழிலாளர் நலனுக்காக TFIEF - அமைப்பு, இதற்கு முன் பல முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு, தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் சம்பளத்திலிருந்து 30 முதல் 40 சதவிகிதம் வரை கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், தயாரிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தையில் கேட்ட சதவிகிதத்தைவிட அப்போது குறைவாகவே கூலி உயர்வு கிடைத்தது. பிறகு, மீண்டும் 2022-ம் ஆண்டு கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் ஏதும் பெரிதளவில் நடக்காததால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
அப்படியான சூழலில்தான் TFIEF - அமைப்பு, கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அப்போதும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள் முழுதாக செவி சாய்க்கவில்லை.
வெறும் 15 சதவிகிதமே அப்போதும் கூலி உயர்வு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வருவாயும் குறைவதால், தயாரிப்பாளர் சொல்வதற்கேற்ப அப்போதைய சமயத்தில் ஒத்துழைத்து கடந்து சென்றிருக்கிறார்கள்.
ஆனால், இம்முறை இந்த அமைப்பு தீர்க்கமாக இருக்கிறது. இன்று வேலைநிறுத்தம் 13-வது நாளை எட்டியிருக்கிறது. இந்த முறை மூன்று முக்கியமான கோரிக்கைகளை TFIEF - அமைப்பு தயாரிப்பாளர்களிடம் முன்வைத்திருக்கிறது.

இதுவரை கிடைத்த ஊதியத்திலிருந்து 30 சதவிகிதம் உயர்வு கேட்டிருக்கிறார்கள். அதுவும் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை வேலை முடிந்த அந்த நாளே கொடுக்கவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
சில துறைகளுக்கு மட்டும் அதிக கூலி உயர்வு கொடுப்பதை நிறுத்திவிட்டு சமமாக அனைத்துத் துறையினருக்கும் கூலி உயர்வு கிடைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால், தயாரிப்பாளர்கள் இந்த கோரிக்கைகளுக்கு முழுவதுமாக கவனத்தைக் கொடுக்காமல் பிடிவாதம் காட்டி வருகிறார்கள். சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் கூலி அதிகமாகக் கொடுப்பது கடினமான விஷயம்.
அதுவும், இன்றைய தேதியில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பளமே பெருமளவு அதிகமாகியிருக்கிறது. திரைப்படங்களின் ஒ.டி.டி உட்பட பல டிஜிட்டல் வியாபாரங்களும் நினைத்ததுபோல இப்போது அமைவதில்லை.
அதனால், இந்த சமயத்தில் கூலி உயர்வை உடனடியாக 30 சதவிகிதம் உயர்த்துவது தயாரிப்பாளர்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் எனவும், இந்த வருடம் 15 சதவிகிதம் உயர்த்துவதாகவும், அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் அதிகப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் இந்த பதிலை மறுத்து, TFIEF அமைப்பு இது சில துறைகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக அமையும், அனைவருக்கும் இப்போது சமமாகக் கூலி உயர்வு கிடைக்கவேண்டும் என பதிலளித்திருக்கிறது.
TFIEF அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தடைப்பட்டிருக்கிறது.
இதனால், இம்மாத வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்த திரைப்படங்களின் வெளியீடும் தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நேரத்தில், தமக்கு பெரிதளவில் நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக TFIEF- அமைப்பில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை வைத்து சில தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை நடத்திவருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சிலர் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக TFIEF - அமைப்பின் தலைவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையில் தலையிட்டு அரசு மூலமாக ஏதாவது தீர்வு காண தயாரிப்பாளர்கள் பலர் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அமைச்சர்களைச் சந்தித்து வருகிறார்கள்.
சில அமைச்சர்கள் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் தெலுங்கு சினிமாவின் ஃபிலிம் சாம்பர் (TFCC) தொழிலாளர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி கூறும் விஷயங்களுக்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
TFCC அமைப்பு யூனியனில் உறுப்பினராக இல்லாதவர்களையும் இப்போதைய நேரத்திற்கு இணைத்து படப்பிடிப்பை நடத்துங்கள் எனவும், நேரடியாக TFIEF - அமைப்புடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம் எனத் தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக, "நடிகர்களுக்கு கோடிகளில் சம்பளத்தைக் கொடுக்கிறார்கள். அவற்றில் ஒரு சிறிய பங்கை, ஒரு படத்தின் தூணாக வேலைகளைக் கவனிக்கும் ஒரு தொழிலாளிக்கு செய்வதில் என்ன ஆகிவிடப் போகிறது!" என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.
இதைத் தாண்டி சில டோலிவுட் நட்சத்திரங்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...