"தூய்மைப் பணியாளர்களை நடுத்தெருவுக்கு தள்ளிய திமுக; வாக்குறுதி எண் 153..." - ஆதர...
Mayasabha Review: ஆந்திர அரசியல் வரலாற்றின் ஆவணம்! - எப்படி இருக்கிறது இந்த பொலிட்டிக்கல் சீரிஸ்?
அதிகம் படித்து தன் குடும்பத்தை வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையோடு மேற்படிப்பிற்காக வெளியூருக்குச் செல்கிறார் கிருஷ்ணமா நாயுடு (ஆதி).
அங்கு அரசியல் ஆர்வத்துடன் மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட களத்திலும் இறங்குகிறார். இளைஞரணியிலிருந்து மக்கள் பணிக்காக நேரடியாக களத்தில் இறங்கி துடிப்புடன் செயல்படும் கிருஷ்ணமா நாயுடு பற்றி அரசியல் தலைவர்கள் இல்லங்களில் பேசப்படுகிறது.
மற்றொரு புறம், மருத்துவ கல்லூரியில் படித்து வரும் எம்.எஸ். ராமி ரெட்டிக்கு (சைதன்யா ராவ்) அரசியல் மீது துளியும் ஆர்வமில்லை.

மருத்துவராகி, தனது ஊரில் ஒரு இலவச மருத்துவமனை நிறுவிவிட வேண்டும் என்று நினைக்கிற எம்.எஸ்.ஆர், திடீரென கிருஷ்ணமா நாயுடுவை ஒரு பேருந்து பயணத்தில் சந்திக்கிறார்.
இருவரும் சித்தாந்த ரீதியாக ஒன்றிணைந்து நண்பர்களாகி மக்கள் பணியில் தொடர்ந்து செயல்படத் தொடங்கி அரசியலுக்கு வருகிறார்கள்.
அங்கிருந்து ஒவ்வொரு படியாகப் பிடித்து அரசியலில் எப்படி முன்னேறுகிறார்கள்? அங்கு எப்படியான அவமானங்களையும், மோதல்களையும், பொருளாதார சிக்கல்களையும் சந்திக்கிறார்கள் என்பதை ஒன்பது எபிசோடுகளில் சொல்லியிருக்கிறார்கள்.
'சோனி லைவ்' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.
மக்களுக்கு ஒரு பிரச்னையென்றால் துணிந்து களத்தில் இறங்கும் இடம், தனக்கு வேண்டியதை செய்ய அரசியல் வாழ்க்கையில் கச்சிதமாக காய் நகர்த்தும் இடம், ஜாம்பவானாக இருக்கும் மாமனாரை எவ்வித தயக்கமும் இன்றி எதிர்க்கும் இடம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தேவையான வேறுபாடுகளை வெளிப்படுத்தி மிளிர்கிறார் கிருஷ்ணமா நாயுடு (சந்திரபாபு நாயுடு) கதாபாத்திரத்தில் வரும் நடிகர் ஆதி.
கோபம், ஆற்றாமை, போராட்ட குணம் என உணர்வுகளால் தனது கதாபாத்திரத்தை உயிர்பெறச் செய்திருக்கிறார் சைதன்யா ராவ் (ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில்).

ஆனால், சீரிஸின் பெரும்பான்மையான இடங்களில் விரிந்த கண்களுடன் வெளிப்படும் ஓவர் ஆக்டிங் வால்யூமை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
நடிகர் சாய் குமார், ஆர்.சி.ஆர் (என்.டி.ஆரின் பிரதிபலிப்பாக வரும் கதாபாத்திரம்) கதாபாத்திரத்திற்கு சரியான சாய்ஸ்! நடை, உடை, கண்ணாடி, நெற்றியில் வைக்கும் பொட்டு, தோளில் போடும் துண்டு என்பது போன்ற பல விஷயங்களால் என்.டி.ஆரின் உருவத்தை கச்சிதமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
அழுத்தமான கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் டீசன்டான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இவர்களைத் தாண்டி சில நிமிடங்களே தோன்றினாலும் தங்களுடைய அனுபவ நடிப்பால் நடிகை திவ்யா தத்தாவும், நடிகர் நாசரும் பார்வையாளர்களின் லைக்ஸ் வாக்குகளைப் பெறுகிறார்கள்.
தொடக்கத்தில் நிதானமான ஷாட்களாலும், சீரிஸ் அடுத்தடுத்த கட்ட நிலைகளை எட்டும்போது பிரமாண்டமான ஷாட்களாலும் படம்பிடித்து ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் ரகுடு, ஞானசேகர் வி.எஸ் குட் மார்க் வாங்குகிறார்கள். லைட்டிங் மூலமாகவும் 70ஸ், 80ஸ் விண்டேஜ் உணர்வை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தன்னால் இயன்றளவுக்கு தொய்வின்றி கிருஷ்ணமா நாயுடு மற்றும் எம்.எஸ். ராமி ரெட்டியின் தேவையான பக்கங்களை மட்டுமே இந்த முதல் சீசனில் கோர்த்து கதை சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்.

ஆனால், முதல் இரண்டு எபிசோடுகளில் பாடல், காட்சி என எங்கெங்கோ ஓடும் காட்சிகளைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.
70ஸ், 80ஸ் வீடுகள், ரயில் நிலையங்கள், பேருந்துகள், கட்சி பதாகைகள் என கலை இயக்குநர், விஷுவல் தரத்திற்கு தீவிர விஸ்வாசியாக அயராது உழைத்திருக்கிறார்.
ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள், வெறும் பொம்மைகளாக விரிந்து நிற்பது டெபாசிட்டை இழக்க வைக்கும் விஷயம்!
இசையமைப்பாளர் சாந்திகாந்த் கார்த்தியின் பின்னணி இசை, படத்தில் முக்கிய திருப்பத்தைக் கொண்டு வரும் காட்சிகளின் வீரியத்தை பன்மடங்கு அதிகப்படுத்தியிருக்கிறது. ஆனால், பாடல்கள் தன் வேலையை சரியாகச் செய்யாமல் வெறுமனே வந்து போகின்றன.
கிருஷ்ணமா நாயுடுவின் குடும்பம், அவருக்கும் எம்.எஸ்.ஆருக்கும் இடையேயான நட்பு, எம்.எஸ்.ஆரின் அரசியல் வருகை, தேர்தலை வெல்ல கிருஷ்ணமா நாயுடு கையிலெடுக்கும் தந்திரம், மாமனாருக்கு எதிராக களத்தில் நின்று பின் அவருடனேயே கிருஷ்ணமா நாயுடு கைகோர்ப்பது என்பதை இந்த சீரிஸில் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தேவகட்டா.

முதல் இரண்டு எபிசோடுகள் பாடல்களால் டல் அடிக்கச் செய்தாலும் அடுத்தடுத்த எபிசோடுகளில் பரபரவென நகரும் திரைக்கதையைக் கோர்த்திருக்கிறார்.
ஆந்திர அரசியல் வரலாறு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாம் பெரிதளவில் தெரிந்திடாத பக்கங்களையும் இந்த சீரிஸின் திரைக்கதையில் சரியான லெவலில் சேர்த்து எவ்வித குழப்பமும் இன்றி நமக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அவசரநிலைக் காலத்தில் திணிக்கப்பட்ட கட்டாய கருத்தடை, நில உரிமைக்காக போராடிய நக்சல்லைட்கள், கட்சிகளில் முக்கியப் பொறுப்பிலிருந்தாலும் சாதிய ரீதியாக ஓரங்கட்டப்படும் அவலம், சாதிய கட்டமைப்பு வேட்பாளர்களுக்கான ஓட்டுகளைத் தீர்மானிப்பது, சினிமா நட்சத்திரங்களைக் கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடுவது என ஆந்திர அரசியலில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருப்பது நல்ல டாக்குமென்ட்!

'நாங்க ராமரைப் பார்த்தது இல்லை. எங்க தலைவனைதான் படத்துல ராமராகப் பார்த்திருக்கோம். அவர்தான் எங்களுக்கு ராமர்' என்பது போன்ற வசனங்கள் ஆந்திர அரசியலில் ஏற்பட்ட திருப்பத்திற்கான காரணத்தைப் பிரதிபலிக்கும் சான்று!
ஆனால், புனைவாக சேர்க்கப்பட்ட காட்சிகளில் தலைதூக்கி எட்டிப் பார்க்கும் சினிமாத்தனம் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடுகிறது.
ஆரம்ப கால கிருஷ்ணமா நாயுடுவின் குடும்ப பக்கங்களைப் பெரிதளவில் காட்சிப்படுத்தாதது, அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பைத் தூண்ட, கிருஷ்ணமா நாயுடு கட்சியின் கட்டுப்பாட்டைத் தன் பக்கம் கொண்டு வருவதை நேரடியாகக் காட்சிப்படுத்தியிருப்பது, இறுதியில் பல கேள்விகளையும் எழுப்புகின்றன.
70, 80-களின் ஆந்திராவைக் கண்முன் நிறுத்திய இந்த சீரிஸ் ஆந்திர அரசியலை காட்சிப்படுத்திய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக நிற்கும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...