Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) வாக்கில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) முதல் ஆக. 22 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆக.17-இல் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 160 மி. மீ. மழை பதிவானது. மேலும், வால்பாறை (கோவை) - 150 மி.மீ, சின்கோனா (கோவை), சோலையாறு (கோவை) - தலா 120 மி. மீ. , அவலாஞ்சி (நீலகிரி) 100 மி. மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக. 17 முதல் ஆக. 20 வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.