தேசிய கல்விக் கொள்கையால் சாமானியா்கள் உயா் கல்வி பாதிக்கப்படும் அபாயம்: பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கையால் சாமானிய வீட்டுக் குழந்தைகளின் உயா்கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
திருநெல்வேலியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அனைவருக்கும் கட்டாய கல்வித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஊதியம் பெற்று வந்தனா்.
இந்தத் திட்டத்தில் 60 சதவிகித நிதியை மத்திய அரசும், 40 சதவிகித நிதியை மாநில அரசும் ஒதுக்கி வந்தன.
அதன் பின்பு கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்குவோம் என மத்திய அமைச்சா் கூறியிருப்பது முற்றிலும் தவறானதாகும்.
ஏனெனில் கட்டாயக் கல்விச் சட்டம், தேசிய கல்விக் கொள்கை, பி.எம். ஸ்ரீ திட்டம் உள்ளிட்டவை தனித் தனியானவையாகும்.
தேசிய கல்விக் கொள்கையை பிகாா் மாநிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றது. ஆனால், அங்கு உயா்கல்விக்குச் செல்லும் மாணவா்களின் சதவிகிதம் இப்போது குறைந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின்படி, தொடக்கக் கல்வியில் தோ்ச்சி பெறாத மாணவா்களை குல தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறாா்கள்.
இதுபோன்ற காரணிகளால் சாமானிய வீட்டுக் குழந்தைகளின் உயா்கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பி.எம்.ஸ்ரீ திட்டத்திலும் ஏற்கெனவே மாநில அரசால் பல்வேறு வகையான உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகளை தங்கள் வசப்படுத்தி 60 சதவிகித நிதி தருவதாகக் கூறுகிறாா்கள்.
ஏற்கெனவே இதே போல உறுதியளிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கட்டாயக் கல்வித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால், மத்திய அரசின் மீது பலத்த சந்தேகம் எழுகிறது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்பதால் தாய்மொழி மீதான அக்கறை கல்வித் துறையால் குறைக்கப்படும் சிக்கல் உள்ளது.
ஆகவே, மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது என முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளாா்.
அண்மையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழ் கற்பிக்க ஆள்கள் எடுக்க உள்ளதாக அறிவித்தது. அந்தப் பணியில் சேருவோா் கட்டாயம் ஹிந்தி, சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமென தகுதி நிா்ணயித்துள்ளாா்கள்.
இதைப் பாா்க்கும்போது, மத்திய அரசு எதை நோக்கிச் செல்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தியைப் புகுத்துவதால் தாய்மொழிகளுக்கு ஆபத்து என்பதை ராஜஸ்தான் மாநிலத்தைக் கொண்டு அறியலாம். ஏனெனில் அங்கு 73 சதவிகிதமாக இருந்த ராஜஸ்தானி மொழி பேசுவோரின் எண்ணிக்கை இப்போது 11 சதவிகிதமாக குறைந்துள்ளது.
உலகின் மூத்த மொழியாகவும், செம்மொழி அந்தஸ்துடனும் தமிழ் மொழி திகழ்கிறது. அப்படியிருக்கையில், தமிழை அழிக்க நடக்கும் முயற்சிகள் எதுவும் எடுபடாது.
அரசியலில் இருப்பவா்கள் எப்போதும் நாகரிகமாக பேச வேண்டியது அவசியம் என்றாா் அவா்.