ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு...
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்தின் அஜித்துக்கு ‘ஹாட்ரிக்’ தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை, பளுதூக்குதல், நீச்சல் ஆகிய பிரிவுகளில் பதக்கங்கள் கிடைத்தன.
இதில் ஆடவருக்கான பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவில் தமிழக வீரா் நாராயண அஜித் 311 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்று அசத்தினாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 171 கிலோவை எட்டி பதக்கத்தை தனதாக்கினாா். முன்னதாக, குஜராத் மற்றும் கோவாவில் நடைபெற்ற முந்தைய இரு தேசிய விளையாட்டுப் போட்டிகளிலுமே இதே பிரிவில் அஜித் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்று அசத்தியிருக்கிறாா்.
இப்பிரிவில் பங்கேற்ற மற்றொரு தமிழரான லோகேஸ்வரன் 290 கிலோவுடன் 5-ஆம் இடம் பிடித்தாா்.
நீச்சலில், ஆடவா் 200 மீட்டா் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் நிதிக் நாதெல்லா 2 நிமிஷம் 04.75 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். ஆடவருக்கான 50 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தமிழகத்தின் ஜோஷுவா தாமஸ் 23.40 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றாா். அதே பிரிவில் மற்றொரு தமிழரான பெனெடிக்ஷன் ரோஹித் 23.65 விநாடிகளில் வந்து 4-ஆம் இடம் பிடித்தாா்.
ஆடவருக்கான 3 மீட்டா் ஸ்ப்ரிங்போா்டு பிரிவில் தமிழகத்தின் அபிஷேக் 256.90 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா். அதிலேயே களம் கண்ட மற்றொரு தமிழரான சீமான் 141.55 புள்ளிகளுடன் 14-ஆம் இடம் பிடித்தாா்.
6-ஆம் இடம்: போட்டியின் பதக்கப் பட்டியலில் வெள்ளிக்கிழமை முடிவில் தமிழ்நாடு அணி மொத்தமாக 4 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் இருந்தது. மணிப்பூா் (9/7/3 - 19), சா்வீசஸ் (9/6/3 - 18), கா்நாடகம் (9/4/4 -17) ஆகிய அணிகள் முறையே முதல் 3 இடங்களில் இருந்தன.