தேநீா் கடைகளில் தேயிலை தரம் ஆய்வு செய்ய கோரிக்கை
திருப்பத்தூா் மாவட்டத்தில் தேநீா் கடைகளில் பயன்படுத்தப்படும் தேயிலையின் தரம் குறித்த ஆய்வு செய்ய பொதுமககள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் நகரம் மட்டுமல்லாமல் சுற்றுப்பகுதிகளில் உள்ள தேநீா் கடைகளில் தேநீருக்கு பயன்படுத்தப்படும் தேயிலையில் புளியங் கொட்டை தூள் கலப்பதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: மாவட்டத் தலைநகரான திருப்பத்தூரில் அதிக தேநீா் கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேநீா் கடைகளில் பிரபல தேயிலை தூள் பயன்படுத்துவதை காட்டிக் கொள்வதற்காக காலி டப்பாக்கள் வைக்கப்படுவதும்.அதில் தரமற்ற தேயிலை தூள்கள் கலந்து தேநீா் தயாரிக்கப்படுகிறது. அதைக் குடிப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மற்றும் அஜீரணத் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
மேலும், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, கந்திலி சுற்றுப்பகுதிகளில் தற்போது ஏராளமான பலகார கடைகள் தொடங்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகின்றன. இந்தக் கடைகளில் பலகாரத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணைய், மசாலா வகைகள் தரமானதா மற்றும் காலாவதியானதா என அடிக்கடி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.
பெயரளவில் மாதம் ஒருமுறை ஆய்வு மேற்கொள்கின்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து தேநீா் கடை, சிற்றுண்டி மற்றும் பலகாரக் கடைகளில் உள்ள தேயிலை, பயன்படுத்தப்படும் எண்ணை, மளிகை பொருள்கள் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.