செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? - அண்ணாமலை
இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என்று திமுகவுக்கு பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ரூ. 12,110 கோடி ரூபாய் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற உண்மை அம்பலமானதும் அம்புலி மாமா கதைகளை சொல்லிவருகிறார் அமைச்சர் திரு பெரியகருப்பன்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 – 2022 முதல், 2023 – 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லையென்றால், பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்?
அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைகளை கொண்டு போய் வங்கியில் வைத்துக் கடன் வாங்குங்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறித்தான் தேர்தல் பிரச்சாரமே செய்தார். அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா ?
கூட்டுறவுத் துறை அமைச்சர் தனது துறையோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். பேரிடர் மேலாண்மைத் துறைக்குச் சென்றுவிட்டார். ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க வைக்கும் திமுக அரசின் மீதுள்ள பொதுமக்களின் கோபத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்கிறேன்.
மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியை ஒதுக்கவில்லை என்று, தங்கள் கையாலாகாதத்தனத்துக்கு, மத்திய அரசைக் குறை கூறி தனது அறிக்கையை நிறைவு செய்திருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு முறையும் டிசம்பர் மாதம் பருவமழையின்போது, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.
இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், சென்னையின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான். என்ன செய்திருக்கிறீர்கள் சென்னைக்கு? ஒரு ஆண்டிலாவது, பருவமழையைக் கண்டு அஞ்சாமல் சென்னை மக்களால் வாழ முடிகிறதா? அதிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதி ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, கடந்த பதினைந்து ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்? மழை நாள்களில் மட்டும் நாடகமாடுவதை விட்டுவிட்டு, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?
மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும்.
தென்மாவட்டங்கள் நிலைமை இன்னும் மோசம். தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவில் அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையே, மழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைச்சுவை அரங்கேறியது இந்த ஆட்சியில்தானே.
பேரிடர் வரும்போதெல்லாம், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் எங்கு இருக்கிறார் என்பதைத் தேட, தனிக் குழுவே அமைக்கும் நிலைதானே இருந்து வருகிறது. பருவமழைக்கு முன்னர், நீர்நிலைகளையும், மழை நீர் வடிகால்களையும் தூர்வார வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளோம். விவசாய நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாக மாறுவதே, நீர் நிலைகளைத் தூர்வாராமல் புறக்கணிப்பதால்தான் என்பதையும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆனால், அதற்கு உரிய நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மழையால் விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும்படி நடந்துவிட்டு, அதன்பின்னர், நிவாரணம் என்ற பெயரில் நாடகமாடுவது ஏன்?
ஆட்சிக்கு வந்து ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்து, அப்பாவி மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, வருடம் ஒரு மாதம், பேரிடர் நிவாரண நிதி என்று திமுகவினர் ஒப்பாரி வைப்பதால், பொதுமக்களுக்கு என்ன பலன்? இத்தனை ஆண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எந்தெந்த வழிகளில் செலவிட்டீர்கள், இன்னும் என்னென்ன செலவுகளுக்காக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று தெளிவாக மத்திய அரசிடம் கேட்க முதலமைச்சரை எது தடுக்கிறது? மழை வந்த இரண்டாம் நாளே, குத்துமதிப்பாக இத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி வேண்டும் என்று கேட்பது உங்கள் அரசியல் நாடகத்திற்காகதான் என்பதை மக்கள் அறிவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல், தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே தில்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.
இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு, ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?
அமைச்சர் பெரியகருப்பனுக்கு நான் பணிவன்புடன் கூறிக்கொள்வதெல்லாம், உங்கள் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.