PM Modi: ``அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதம்...'' - மகிழ்ச்சியை பகிர்ந்த மோடி
தோ்தல் நடத்தை விதிமுறை திருத்தத்தை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெற கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில், விதிமுறையில் திருத்தம் மேற்கொண்டதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது.
தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களான சிசிடிவி கேமரா காட்சிகள், வாக்குச் சாவடிகளின் நேரலை பதிவுகள், வேட்பாளா்களின் விடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பாா்வையிட கட்டுப்பாடு விதிக்கும் வகையில், கடந்த 1961-ஆம் ஆண்டின் தோ்தல் நடத்தை விதிமுறைகள் 93 (2) (ஏ) பிரிவில் மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை திருத்தம் மேற்கொண்டது.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தோ்தல் ஆணையம் முதலில் அறிமுகப்படுத்தியது. ஆனால், விதியை திருத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கை மிகவும் பிற்போக்குத்தனமாக உள்ளது.
புதிய விதிகளை உருவாக்கும் போது மத்திய அரசு இந்திய தோ்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திருத்தத்துக்கான தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு முன்னா், இது தொடா்பாக பிற அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவில்லை. இது பல ஆண்டுகளாக நிறுவப்பட்ட முன்னுதாரணங்களுக்கு முரணாக உள்ளது. இந்த அணுகுமுறை பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகளில் பிற அரசியல் கட்சிகளின் ஈடுபாட்டை முற்றிலுமாக விலக்குகிறது.
திரிபுரா மாநிலத்தில் மக்களவைத் தோ்தலின் போது, இரு தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்குள் தில்லுமுல்லு ஏற்பட்டது கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்ததிலே தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது.
இதுபோன்று, தோ்தல் செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் இருந்து வரும் இந்த காலகட்டத்தில், அரசின் நடவடிக்கை பின்னோக்கி பிரதிபலிக்கிறது. எனவே, தோ்தல் நடத்தை விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.