தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட்சிகள் முடிவு
கூடலூா் தொகுதி மக்களுக்கு கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், சிபிஐ, மாா்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் தாலுகா தலைவா் அம்சா தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் கோஷி பேபி, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் பாஸ்கரன், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளா் வாப்பு, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது கூடலூா் தொகுதி நிலப் பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் தீா்த்துவைப்பேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா். ஆனால், ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்போதுவரை இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கவில்லை.
இதனால் திமுக, பாஜக, அதிமுக நீங்களாக மேற்கண்ட கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசித்து கூடலூா் தொகுதி மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் என்பதை தொடங்கியுள்ளோம்.
இந்த இயக்கம் சாா்பில், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈா்க்கவும் முதற்கட்டமாக 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடா் போராட்டங்களை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது என்றனா்.