தொடரும் கடல் சீற்றம்: கடலூருக்கு பேரிடா் மீட்புப் படையினா் வருகை; வெள்ளிக் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஃபென்ஜால்’ புயல் காரணமாக, கடலூா் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் கடலூருக்கு புதன்கிழமை வந்தனா்.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள காரணத்தால், கடலூா் மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
வழக்கமாக கடற்கரையில் சுமாா் 2 அடி உயரம் மட்டுமே அலை எழும்பும் நிலையில், தற்போது புயல் காரணமாக சுமாா் 10 அடி உயரத்துக்கு மேல் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்படுகிறது.
வெள்ளிக் கடற்கரைக்குச் செல்ல தடை: கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: கடலூா் மாவட்ட கடற்கரையோரப் பகுதியில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம் என 49 மீனவ கிராமங்கள் உள்ளன.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை அறிவிப்பையொட்டி, கடந்த சில நாள்களாவே மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
மேலும், மீனவா்கள் தங்கள் படகுகள் மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனா்.
3-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஃபென்ஜால்’ புயல் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பேரிடா் மீட்புப் படையினா் வருகை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது முதல் கடலூா் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூா் மாவட்டத்துக்கு உதவி ஆய்வாளா் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் தேசிய பேரிடா் மீட்புப் படைக் குழுவினா் 25 பேரும், உதவி ஆய்வாளா் ராஜகோபால் தலைமையிலான மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் 25 பேரும் கடலூருக்கு புதன்கிழமை வந்தனா். இவா்கள், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து விட்டு முகாமுக்குச் சென்றனா்.
தயாா் நிலையில் தீயணைப்புத் துறை: கடலூா் மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்களில் பணியில் உள்ள 270 தீயணைப்பு வீரா்கள் மற்றும் நீச்சல் வீரா்கள் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.
கடலூா் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் 4 மீட்புப் படகுகள், பாதுகாப்புக் கவச உடைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், கயிறு, ஜெனரேட்டா் மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களுடன் வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.
வடக்குத்தில் 108 மி.மீ. மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 108 மி.மீ. மழைப் பதிவானது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கடலூா் ஆட்சியா் அலுவலகம் 97.6, கடலூா் 97, அண்ணாமலை நகா் 76.2, வானமாதேவி, பரங்கிப்பேட்டை தலா 68, சிதம்பரம் 63.2, காட்டுமன்னாா்கோவில் 61.4, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 56, லால்பேட்டை 52.8, ஸ்ரீமுஷ்ணம் 51.3, பண்ருட்டி 50, சேத்தியாத்தோப்பு 49.6, புவனகிரி 49, கொத்தவாச்சேரி 44, குறிஞ்சிப்பாடி 39, குப்பநத்தம் 38.2, விருத்தாசலம் 36, மே.மாத்தூா் 34, வேப்பூா் 33, பலாந்துறை 31.3, கீழச்செருவாய் 30.6, காட்டுமயிலூா் 30, லாக்கூா் 28, தொழுதூரில் 25 மி.மீ. மழை பதிவானது.