`சைத்ராவும் நட்சத்திராவும் 'உருட்டு'னு சொன்னது ரொம்பவே காயப்படுத்திடுச்சு’ - ஜெய...
தொன்மையான கட்டடக் கலை கோயிலில் முருகப்பாஸ் சோழ மண்டலம் - என்ன பணிகள் செய்யப் போகிறார்கள்?
காஞ்சிபுரத்தில் உள்ள மிக தொன்மை வாய்ந்த கைலாச நாதர் திருக்கோயிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது முருகப்பா குழுமத்தின் சோழமண்டலம் நிறுவனம்.
'இந்திய தொல்லியல் துறையினால் அடாப்ட் ஏ ஹெரிடேஜ் 2.0' (Adopt a Heritage 2.0) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்பளிக்கிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாரம்பரிய தொன்மையான சின்னங்களைத் தனியார் அமைப்புகள் தத்தெடுத்து பராமரிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருப்படிதட்டடை என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் கைலாசநாதர் திருக்கோயிலானது தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான கட்டடக்கலை அதிசயங்களுள் ஒன்று. இந்தக் கோயிலானது பல்லவர் கால ஆட்சியின் கலாசார மற்றும் கட்டடக்கலையின் சான்றாக உள்ளது. இத்திருக்கோயிலை அடாப்ட் எ ஹெரிடேஜ் 2.0 என்ற திட்டத்தின் மூலம் தற்போது பராமரித்து சுற்றுலா வசதியினை மேம்படுத்துவதற்கான பணியில் களமிறங்கி உள்ளது முருகப்பா குழுமத்தின் சோழமண்டலம் நிறுவனம். அதற்கான பணிகளை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்றது.
இது குறித்து சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரவீந்திர குமார் குண்டு கூறுகையில், “வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான நினைவுச் சின்னமாக திகழும் கைலாசநாதர் திருக்கோயிலை பராமரிக்கவும், சுற்றுலாவுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் சோழமண்டலம் நிறுவனம் பங்களிப்பு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பணியினை நாங்கள் செய்ய இருக்கிறோம். அதன்படி இத்திருக்கோயிலின் அருகில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை மற்றும் பராமரிப்பு வசதி உள்ளிட்ட சுற்றுலாவுக்கு அத்தியாவசியமான தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சோழமண்டலம் நிறுவனம் ஏற்படுத்தித் தரும். மேலும் இத்திருக்கோயிலின் அருகிலேயே கோயில் குறித்து சரியான தகவல்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதற்காக ஒரு மொழிபெயர்ப்பு மையம் மற்றும் சிற்பங்களுக்கான ஒரு அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்படும். மேலும் இரவு நேரத்தில் அழகாக காட்சிப்படுத்த ஒளிவிளக்கு வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய சின்னங்களின் உத்தேச பட்டியலில் 2021 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. இது இத்திருக்கோயிலின் கலாச்சார, கட்டிடக்கலை மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். எதிர்காலத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் நிரந்தரமாக இந்த கோயில் இடம் பெறுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதற்காக இத்திருக்கோயிலின் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் சோழமண்டல நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இந்தக் கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தொன்மையான வரலாறு மற்றும் நவீன அனுபவங்களை ஒரு கலவையாக கலந்து வழங்குவதே சோழமண்டல நிறுவனத்தின் நோக்கமாகும்” என்று கூறினார்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் மேம்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமய அறநிலைத்துறை, இந்திய தொல்லியல் துறை மற்றும் சோழமண்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.