உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
`தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர கூட மறுக்கின்றனர்..!' - L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சொல்வதென்ன?
எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, `கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை' என்று குறைபட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ``அரசின் நலத்திட்டங்களால் சொந்த ஊரில் அனைவரும் நன்றாக இருக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூருக்கு வேலைக்கு வர மறுக்கின்றனர். எனவே கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. தொழிலாளர்கள் வாய்ப்புகளை தேடிச் செல்ல விரும்புவதில்லை. அதற்கு காரணம் உள்ளூர் பொருளாதாரம் நன்றாக இருக்கலாம். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுகிறது. கட்டுமானத்துறையில் விசித்திரமான தொழிலாளர்கள் இடம்பெயர்வு இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/xem1ccjw/Construction-workers.jpg)
எங்களது நிறுவனத்திற்கு 4 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அடிக்கடி தொழிலாளர்கள் வேலையை விட்டுச் செல்வதால் 16 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கவேண்டியிருக்கிறது. பணவீக்கத்திற்கு தக்கபடி சம்பளத்தையும் மாற்றி அமைக்கவேண்டியிருக்கிறது. இந்தியாவை விட வளைகுடா நாடுகளில் 3.5 மடங்கு சம்பளம் அதிகமாக கிடைக்கிறது. கடந்த மாதம் எனது தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். வீட்டில் இருந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? எவ்வளவு நேரம் மனைவியை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள். அலுவலகத்திற்கு வந்து வேலையை செய்யுங்கள். நானும் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/8d3eqy4e/i8mncg4osn-subrahmanyan625x30010January25.webp)
தொழிலதிபர் ஆதார் பூனாவாலா, ஆனந்த் மகேந்திரா, ஐ.டி.சி சஞ்சய் புரி ஆகியோரும் தொழில் துறையின் உற்பத்திக்காக வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலையை பேணுவது அவசியம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இப்பிரச்னை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. வாரத்தில் வேலை நேரத்தை 70 அல்லது 90 மணி நேரமாக அதிகரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் வாரத்தில் 60 மணி நேரம் வேலை செய்வது பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக பட்ஜெட்டிற்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒருவர் தினமும் 12 மணி நேரம் செலவு செய்யும்போது மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.