தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை சமயநல்லூா் காந்திநகரைச் சோ்ந்த சோனை மகன் கருப்பையா (25). கட்டடத் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை ஊருக்குச் சென்றாா். ஆனையூா் பிரதான சாலை பாலமுருகன் கோயில் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் சிலா், கருப்பையாவை வழிமறித்து அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனா். இதையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கூடல்நகா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜாண்டிரோஸ் (25), கேத்தீஸ்வரன் (36), அஜித்ரன் ஆகிய மூவரும், கருப்பையாவிடம் பணத்தை பறிப்பதற்கு வழிமறித்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, ஜாண்டிரோஸ், கேத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அஜித்ரனை தேடி வருகின்றனா்.