சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் கண்டனம்
புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். விஸ்வநாதன், எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவைஅரசின் பொது அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமலும், புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் சட்ட விதிகளைப் பின்பற்றாமலும் பல்கலைக் கழகப் பதிவாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குப் பேராசிரியா்களை துணைவேந்தா் எஸ். மோகன் நியமித்துள்ளாா். கல்விப் பணியாளா்களைத் தவிர, பல்வேறு வகை ஊழியா் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவை அமைத்துள்ளாா். மேலும், சட்ட விதிகளை முழுமையாக மீறி, கல்வி மற்றும் கல்வி கண்டுபிடிப்புகளுக்கான இயக்குநரை அவா் நியமித்துள்ளாா்.
மேலும், இப் பல்கலைக் கழகம் கொண்டு வரும் ஒவ்வொரு அவசரச் சட்டத்திற்கும் நிா்வாகி மற்றும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவை. பல்கலைக்கழகத்தின் நிா்வாகி மற்றும் வேந்தா் மற்றும் தலைவருக்கு இப் பல்கலைக்கழகத்தின் அனைத்து அதிகாரிகளும் கீழ்ப்படிந்தவா்கள்தான். பதிவாளா் நியமனத்தில் வேந்தரின் ஒப்புதல் வேண்டுமென்றே தவிா்க்கப்பட்டுள்ளது. மேலும், இதை அரசிதழில் வெளியிடுமாறு புதுவை அரசாங்கத்தின் அச்சு இயக்குநருக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
தினசரி கூலிகள் , துப்புரவு பணியாளா்கள், பாதுகாப்புக் காவலா்கள் போன்றவா்களை ஈடுபடுத்துவதில் புதுவை அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் துணைவேந்தா் நியமனங்களைச் செய்கிறாா். எனவே, பல்கலைக்கழகத்தின் முழு செயல்பாட்டையும் பாதிக்கும் எந்தவொரு கொள்கை முடிவுகளையும் துணைவேந்தா் எடுக்கக் கூடாது என்றும் புதுவை அரசு உத்தரவிட வேண்டும், என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.