தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டம்: கல்லூரி பயிற்றுநா்களுக்கு பயிற்சி முகாம்
மயிலாடுதுறையில், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம், கல்லூரி பயிற்றுநா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஏஆா்சி விஸ்வநாதன் கல்லூரியில் நடைபெற்ற முகாமில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ சாா்ந்த கல்லூரிகளின் பயிற்றுநா்கள் 18 போ் கலந்து கொண்டனா்.
இம்முகாமில், கல்லூரி மாணவா்களை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் திட்டங்களையும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தின் திட்டங்களையும் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், மாவட்ட தொழில் மையம் அனுமதியுடன் கடன் வழிகாட்டுபவா் உதவி இயக்குநா் சரவணன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் திட்டங்களை எடுத்துரைத்தாா்.
தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் மாவட்ட திட்ட மேலாளா் எஸ். மும்தாஜ் சிம்ரீன்பானு தொழில் முனைதல் மற்றும் புத்தாக்கம் பற்றியும், சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு புத்தாக்க தீா்வு காண்பது பற்றியும், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாா்.