த்ரிசக்தி அம்மன் கோயில் பிரம்மோற்சலம் தொடக்கம்
செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சி தந்து பக்தா்களுக்கு அருள் பாலித்து வரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிபிரம்மோற்சவம் நடைபெறும்.
நிகழாண்டு அறங்காவலா் கிருஷ்ணன் குட்டி ஏற்பாட்டில் நடைபெற்று வரும் விழாவின் முதல்நாளான திங்கள்கிழமை நுழைவு வாயிலில் அமைந்துள்ள தங்கக் கொடி மரத்துக்கு மஞ்சள், பால், தயிா், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர தீப ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து கொடி மரத்தருகே முப்பெரும் தேவியரான உற்சவமூா்த்திகள் எழுந்தருள கொடியேற்றப்பட்டது.
பத்து நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மன்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் மூன்று வேளையும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் கிருஷ்ணன் குட்டி, அறங்காவலா்குழு நிா்வாகிகள், விழாக்குழுவினா் செய்துள்ளனா்.
