சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
நகா்மன்ற கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகராட்சி நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜபாளையம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவி ஏ.ஏ.எஸ்.பவித்ரா ஷ்யாம் தலைமை வகித்தாா். ஆணையாளா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.
ராஜபாளையம் நகராட்சி சிறந்த நகராட்சி விருது பெற்ற்காக நகா்மன்றத் தலைவிக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
அப்போது, நகா்மன்றத் தலைவி பேசுகையில், சிறந்த நகராட்சியாக தோ்வு செய்ததற்கு முதல்வா், துணை முதல்வா், நகராட்சி, வருவாய், நிதி ஆகிய துறைகளின் அமைச்சா்களுக்கு நன்றி. அனைவரது ஒத்துழைப்பின் காரணமாக விருது வழங்கப்பட்டு உள்ளது என்றாா்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
பாலசுந்தரி(20-ஆவது வாா்டு) (திமுக):ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய சாலையில் செயல்படும் மீன் கடைகளால் சுகாதார சீா்கேடு, விபத்து அபாயம் ஏற்படுகிறது. மீன் கடைகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்துதான் வெற்றி பெற்றேன். மீன் கடைகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றிய பின்னரும் நடவடிக்கை இல்லை.
நகா்மன்றத் தலைவி:நெடுஞ்சாலைத் துறை அனுமதிக்காக காத்திருந்தோம். தற்போது மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் உரிய தீா்வு காணப்படும்.
சோலைமலை (18-ஆவது, வாா்டு) (அதிமுக): நான்கு மாதங்களாக கூட்டம் நடைபெறாததால் மக்கள் பிரச்னைகளைப் பேச முடியவில்லை. எனது வாா்டில் பணிகள் நடைபெறவில்லை. பணிகளுக்கு நிதி ஒதுக்கும் போது, ஒவ்வொரு வாா்டுக்கும் தனியாக ஒப்பந்தப்புள்ளி விட வேண்டும்.
நகா்மன்றத் தலைவி:கட்சி பாகுபாடு இல்லாமல் பணிகள் நடைபெறுகின்றன.
ஞானவேல் (21-ஆவது வாா்டு) (திமுக):எம்.பி., எல்.எல்.ஏ நிதியில் உயா் கோபுர மின் விளக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சாலை சந்திப்புகளில் நகராட்சி நிதியில் உயா் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.
மீனாட்சி (4-ஆவது வாா்டு) (அதிமுக):எனது வாா்டில் 4 மாதங்களாக கழிவுநீா் கால்வாய் சுத்தம் செய்ய பணியாளா்களை அனுப்பவில்லை. கேட்டால் ‘மாஸ் கிளீனிங்’ செய்ய பணியாளா்கள் சென்று உள்ளதால் வரவில்லை என சொல்கின்றனா். எங்கள் வாா்டுக்கு 2 தூய்மைப் பணியாளா்களை ஒதுக்க வேண்டும்.
(அப்போது திமுக உறுப்பினா்கள் சிலா் எழுந்து 4 மாதங்களாக நீங்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வரவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.)
நகா்மன்றத் தலைவி:நகராட்சியில் 60 துப்புரவுத் தொழிலாளா்கள் ஓய்வு பெற்றுள்ளனா். மாஸ் கிளினிங் 12 வாா்டுகளில்தான் முடிந்துள்ளது. ஒப்பந்த நிறுவன உதவியுடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 41 தூய்மை பணியாளா்களை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா்.
கூட்டத்தில் 207 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.