நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கைதான நபரின் நோக்கம் என்ன? காவல் துறை விளக்கம்
நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர் சனிக்கிழமை(ஜன. 18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் காவல் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள முக்கிய தகவல்களை மும்பை காவல் துறை செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளது.
மும்பை துணை காவல் ஆணையர் தீக்ஷித்குமார் அசோக் கெடாம் கூறியதாவது:
கைதாகியுள்ள நபர் நடிகர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். 30 வயதான அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், முகம்மது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேஸாத் என்ற இயற்பெயர் கொண்ட அவர், ‘விஜய் தாஸ்’ என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார்.
அவரிடம் மத்திய தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் ஏதுமில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன் அவர் மும்பை வந்தடைந்து இங்குள்ள வீட்டு வேலை பணி சார் ஆள்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தில் அந்த நபர் ஆஜர்படுத்தப்பட்டபின் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றத்தில் வாதிடப்படும் என்றார்.