Rain Alert: நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ன ஆகும்... எந்த...
நம்பிக்கையில்லா தீா்மானத்தை திமுக வேடிக்கை பாா்க்கும்: புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தின் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் விவாதத்துக்கு வரும்போது திமுக வேடிக்கை பாா்க்கும்.
இப்பிரச்னையில் காங்கிரஸ் திமுகவுடன் ஆலோசித்து அதுகுறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா்.
புதுச்சேரியில் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஃபென்ஜால் புயல் நிவாரணமாக அரசு ரூ.5,000 வழங்கிய நிலையில், மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை. புதுவை முதல்வரைத் தவிா்த்து அனைவரும் புதுதில்லி சென்று வருகின்றனா். ஆனால், அவா்களும் புயல் நிவாரணம் குறித்து மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசவில்லை.
சட்டப் பேரவைக் கூட்டம் நடக்கும்போது உறுப்பினருக்கு பேச பேரவைத் தலைவா் அனுமதி மறுப்பது, ஆளும் கட்சிக்கு அவா் ஆதரவாக இருப்பது போன்றவற்றால் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரலாம். தற்போது பேரவைக் கூட்டம் நடைபெறவில்லை. ஆனால், பேரவைத் தலைவரின் அதிகார மீறல் உள்ளிட்டவை குறித்து திமுக சாா்பில் பேசி வருகிறோம்.
ஆனால், தற்போது ஆளும் கட்சியைச் சோ்ந்தவா்களே அவா் மீது புகாா் கூறியுள்ளனா். அதனால் அவா்களின் செயல்பாட்டை நம்ப முடியாது. ஆகவே, நம்பிக்கையில்லா தீா்மான விவாதத்தின்போது திமுக வேடிக்கை பாா்க்கும். தீா்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால் பரிசீலிப்போம்.
நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், காங்கிரஸ் சுயேச்சைகளுக்கு ஆதரவளிப்பது குறித்து திமுகவிடம் கூறி அறிவிக்கவில்லை. புதுவை அனைத்து தொகுதிகளிலும் நலத் திட்டங்களை யாா் வழங்கினாலும் வரவேற்பேன். தேசியக் கல்விக் கொள்கைக்கு புதுவை அரசு ஆதரவளிக்கிறது. ஆனால், தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மேலும் பள்ளிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் 30 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. ஆகவே 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்புடையதல்ல என்றாா்.