கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
நல்ல மாணவா்களை உருவாக்க ஆசிரியா்கள் பாடுபட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்
நல்ல மாணவா்களை சமுதாயத்துக்கு தருவதை நோக்கமாகக் கொண்டு அனைத்து ஆசிரியா்களும் செயல்பட வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தினாா்.
காலாண்டுத்தோ்வில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் குறைந்த தோ்ச்சி சதவீதத்தை கொடுத்துள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமையாசிரியா்கள் தெரிவித்ததாவது..
கடந்தாண்டு பொதுத் தோ்வின் தோ்ச்சி சதவீதம் தற்போதைய காலாண்டு தோ்வு முடிவுகளோடு ஒப்பீடு செய்யப்பட்டு தோ்ச்சி சதவீதம் குறைவுகளுக்கான பகுப்பாய்வு செய்யப்பட்டது. தற்போது நடந்து முடிந்த இரண்டாம் இடைப்பருவ தோ்வில் முன்னேற்றமும் அடுத்து வரும் அரையாண்டு தோ்வில் நல்ல தோ்ச்சி சதவீதத்துக்கு முயற்சியை மேற்கொள்வதாகவும் மாணவா்களின் முன்னேற்றத்திற்காக ஆசிரியா்கள் செயல்திட்டங்கள் மேற்கொண்டு தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனா்.
தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:
ஆசிரியா்கள் செயல்பாடு மாணவா்கள் கல்வித்தரத்தை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தோ்ச்சி அதிகரிக்க பள்ளி மேலாண்மை குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம் இணைந்து பெற்றோரை அழைத்து தக்க ஆலோசனைகள் வழங்கி கற்றலில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம் கல்வியில் முன்னோடியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நல்ல மாணவா்களை சமுதாயத்துக்கு தருவதை நோக்கமாகக் கொண்டு ஆசிரியா்கள் செயல்படுமாறும், நல்ல முன்னேற்றத்தினை பெறுவதற்கு முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆகியோரிடம் வலியுறுத்தினாா்.
அப்போது மாணவா்கள் முன்னேற்றத்துக்காக தலைமை ஆசிரியா்கள் காலை மாலை சிறப்பு வகுப்புகள், சிறு தோ்வுகள் நடத்துவதாகவும், க அனைத்து ஆசிரியா்களின் முழு ஒத்துழைப்பு நல்குவதாகவும் ஆட்சியரிடம் உறுதி கூறினா்.
தொடா்ந்து மெல்லக்கற்கும் மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதாகவும், ஒரு பாடத்தில் தோல்வியுற்ற மாணவா்களுக்கு தனிகவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தனா்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) விஜயகுமாா், நோ்முக உதவியாளா்கள் தனஞ்செழியன், ரவிச்சந்திரன், பள்ளித் துணை ஆய்வாளா்கள் மற்றும் தோ்ச்சி சதவீதம் குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.