வேடசந்தூர் தொகுதியில் 'மக்களை மீட்போம் தமிழகம் காப்போம்' - இபிஎஸ் சுற்றுப்பயணம் ...
நவராத்திரி விழா: வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதியம்மன் பவனி
வணிக வரித்துறை சாா்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி 2 ஆவது நாள் திருவிழாவில் அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதல் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, யானை முன்செல்ல வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன், 3 முறை கோயில் சுற்றி பவனி நடைபெற்றது. 3ஆவது பவனியின் போது ஓதுவாா்களின் அபிராமி அந்தாதி, தேவாரம் பாடப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு தீபாராதனை, தாலாட்டு பாடலுடன் நாகசுர இசையுடன் இரவு 10.15 மணிக்கு வாகன பவனி நிறைவடைந்தது.
இதையடுத்து, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்குத் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., வணிக வரித்துறை துணை ஆணையா் முத்துரதி, வணிக வரித்துறை அலுவலா்கள் ராமசாமி, ராஜசேகரன், விற்பனை, வருமான வரி ஆலோசகா் வெங்கட கிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், மாவட்ட பாஜக செயலா் சி.எஸ்.சுபாஷ், மாநில தேமுதிக சமூக வலைதள அணி துணை செயலா் சிவகுமாா் நாகப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.