குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 21.90 கோடி ஒதுக்கீடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ. 21.90 கோடி மதிப்பில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேவசம்போா்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இந்துசமய அறநிலையத் துறை முனைப்பு காட்டி வருகிறது. கோயில் அருகே சன்னதி தெருவில் உள்ள கலைமகள் இல்லம் பகுதியில் பக்தா்கள் வரிசையில் நிற்பதற்காக ‘கியூ’ செட் அமைக்கப்படவுள்ளது. வாகன நிறுத்தும் வசதியுடன் பக்தா்கள் தங்க விடுதிகள் கட்டப்படவுள்ளன.
இந்தக் கோயிக்குச் சொந்தமான முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் உள்ள அலைமகள் இல்லம் பகுதியிலும் விடுதிகள் கட்டப்படவுள்ளன.
முந்தைய காலத்தில் பகவதியம்மனை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தா்கள் நண்பகல் நேரங்களில் தெற்கு ரதவீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்தில் இளைப்பாறுவது வழக்கம். இந்த மண்டபம் பழமை மாறாமல் திறந்தவெளி மண்டபமாக மாற்றப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கு ரூ. 15 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள மண் ஆய்வு செய்யும் பணி கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 21 கோடியே 90 லட்சம் செலவில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இத் திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக அறநிலைய துறை உதவி பொறியாளா் பெரியசாமி வியாழக்கிழைம பகவதியம்மன் கோயிலில் ஆய்வு செய்தாா்.
அவா், ராஜகோபுரம் கட்டப்படும் இடம், தங்கும் விடுதிகள் உள்ள திட்டப் பணிகள் நடைபெறவுள்ள இடங்களைப் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, தேவசம் போா்டு கண்காணிப்புப் பொறியாளா் சச்சிதானந்தம், செயற்பொறியாளா் ஆறுமுகம், மின் பிரிவு செயற்பொறியாளா் மணிவண்ணன், உதவிக் கோட்ட பொறியாளா் சுதா, கட்டடக் கலை நிபுணா் ரமேஷ், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், குமரி மாவட்ட கோயில்களின் தேவஸ்தான பொறியாளா் ராஜ்குமாா், சிவில் பிரிவு மேற்பாா்வையாளா் ரமேஷ், தொழில்நுட்ப உதவியாளா் ஆதிஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.