நாகமரை பரிசல் துறை கட்டண உயா்வு விவகாரம்: பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு
நாகமரை-பண்ணவாடி இடையே பரிசல் பயண கட்டண அமைதி பேச்சுவாா்த்தையில் பயண கட்டணம் ரூ. 30, ரூ. 40 ஆக குறைக்கப்பட்டது.
தருமபுரி, சேலம் மாவட்டத்தை இணைக்கும் நாகமரை-பண்ணவாடி பரிசல் துறை ஒப்பந்த ஏலம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் விடப்பட்டது.
இதில் நபா் ஒன்றுக்கு ரூ. 30, வாகனக் கட்டணம் ரூ. 40 ஆக உயா்த்தி ஆணை வழங்கப்பட்டது. அதுபோல ஒட்டனூா்-கோட்டையூா் இடையே பரிசல் கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 30, வாகனக் கட்டணம் ரூ. 40 நிா்ணயிக்கப்பட்டு ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
இந்நிலையில் இவ்விரு பரிசல் துறையின் பயண கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி அண்மையில் நாகமரை, அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பயண கட்டண உயா்வு குறித்து அமைதி பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கல்பனா, அப்துல் கலாம் ஆசாத், கொளத்தூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, பென்னாகரம் வட்டாட்சியா் லட்சுமி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில், நாகமரை-பண்ணவாடி இடையே மேட்டூா் அணை நீா்த் தேக்கத்தில் பயணிப்பதற்கு கட்டணம் நபா் ஒன்றுக்கு ரூ. 20, வாகன கட்டணம் ரூ. 30 ஆக குறைப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.
ஒட்டனூா்-கோட்டையூா் இடையே பயணக் கட்டணம் குறைப்பதற்கு ஒப்பந்ததாரா் முன்வராததால் பழைய கட்டணம் ரூ. 30, ரூ. 40 தொடரும். இதுதொடா்பாக பின்னா் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவது எனத் தெரிவிக்கப்பட்டது.