UPSC-ல் தேர்ச்சி பெற்றும் நிராகரிப்பு; 15 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற ...
`நாகரீகமற்றவர்களா?' தமிழச்சி vs தர்மேந்திர பிரதான் vs கனிமொழி - மக்களவையில் நடந்த மோதல்| முழு விவரம்
நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க எம்.பி எழுப்பிய கேள்விஎழுப்பியதற்கு, `நாகரீகமற்றவர்கள்' என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திரான் காட்டமாகப் பேசியது பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இன்று காலை தொடங்கிய அமர்வில் மத்திய அரசுக்கு கேள்வியெழுப்பிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், ``தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால், பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ரூ. 2,000 கோடியை வேறு மாநிலங்களுக்கு பகிரப்படுருக்கிறது.

மத்திய அரசின் இந்த செயல் கூட்டாட்சி தத்துவது எதிரானது. பள்ளி கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை, மாநிலத்துக்கு எதிராக பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இது பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் உறுதிசெய்ய வேண்டும்." என்றார்.
தி.மு.க-வினர் ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள்!
தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்குப் பதிலுரையாற்றிய தர்மேந்திர பிரதான், ``இந்திய நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 20 நாள்கள் இருக்கிறது... தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில், பி.எம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு தயாராக இருந்தது. இப்போது கேள்வியெழுப்பியவர் உட்பட தி.மு.க எம்.பி-க்கள் சிலர், தமிழக கல்வியமைச்சருடன் வந்து என்னை நேரில் சந்தித்து திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால், திரும்பிய பிறகு அந்த நிலைப்பாட்டிலிருந்து யு-டர்ன் செய்துவிட்டனர். இது அவர்களின் பிரச்னை.

காங்கிரஸ் ஆளும் கர்நாடக உட்பட பா.ஜ.க ஆட்சி நடைபெறாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டன, பி.எம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தியிருக்கின்றன. ஆனால், தி.மு.க நேர்மையற்றது. தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குகின்றனர். தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மொழிப் பிரச்னை செய்வது மட்டுமே அவர்களின் வேலை. அதில்தான் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் (தி.மு.க) ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள்." என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
SSA நிதி ஒதுக்கக் கோரிதான் மத்திய அமைச்சரைச் சந்தித்தோம்!
அவரைத்த்தொடர்ந்து எழுந்து பேசிய திமுக எம்.பி கனிமொழி, ``தமிழக எம்.பி-ககள், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக மக்களை நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. எஸ்.எஸ்.ஏ நிதி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கக் கோரிதான் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அப்போதே, தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவிட்டோம்.

ஏனெனில், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டு மத்திய அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். தமிழக எம்.பி-க்கள் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை." என்று கூறினார்.
NEP-ஐ அரசியலமைப்புக்கு உட்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்!
பின்னர், கனிமொழியின் உரைக்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான், ``என்னுடைய வார்த்தை யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். தமிழக கல்வியமைச்சருடன் அவர்கள் என்னை வந்து சந்தித்தபோது சில விஷயங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தமிழகம் திரும்பிய பிறகு முதல்வரும் ஒப்புக்கொண்டார். அதன்பின்னர், உட்பிரச்னை எழுந்த பிறகு ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்கள். கர்நாடகா, ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டன. இவர்களுக்கும் அந்தத் திட்டம் ஒதுக்கப்பட்டது. அரசியலமைப்புக்கு உட்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
#WATCH | Delhi: Union Education Minister Dharmendra Pradhan says, "...Recently, the Government of India had a discussion with the Tamil Nadu government. A way of compromise was also found in this. If the Tamil Nadu government agrees to that path, we have no objection in giving… https://t.co/Pxy8aW4onspic.twitter.com/szXyK3iUSf
— ANI (@ANI) March 10, 2025
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த தர்மேந்திர பிரதான், ``தமிழக அரசுடன் மத்திய அரசு சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், சுமூகமான வழி ஒன்று காணப்பட்டது. அதற்கு, தமிழக அரசு சம்மதித்தால் அவர்களுக்கு பி.எம் ஸ்ரீ நிதி ஒதுக்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தமிழ்நாட்டில், பி.எம் ஸ்ரீ பள்ளிகளில் தமிழ் மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். இதில், அவர்களுக்கு என்ன பிரச்னைவென்றே எனக்குப் புரியவில்லை. யார் மீதும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. அவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்" என்று தி.மு.க-வை விமர்சித்தார்.
தர்மேந்திர பிரதான் பொய் சொல்கிறார்!
மறுபக்கம், இதேபோன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ``தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டதாக தர்மேந்திர பிரதான் பொய் சொல்கிறார். தி.மு.க ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கை அல்லது மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை.
#WATCH | Delhi: On 3-language policy under NEP (National Education Policy) row, DMK MP Dayanidhi Maran says, " ...Dharmendra Pradhan lied by saying that DMK govt had agreed (to sign NEP). DMK never agreed to NEP or 3-language policy, all we said that we can't...why should our… pic.twitter.com/AuVScetFja
— ANI (@ANI) March 10, 2025
எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டோம். வட இந்திய மாணவர்கள் ஒரேயொரு மொழியை மட்டும் கற்கும் அதே வேளையில், தமிழக மாணவர்கள் மட்டும் ஏன் 3 மொழிகளைக் கற்க வேண்டும்? நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி கற்க விரும்பும் மாணவர்கள் இருந்தால், அவர்கள் சுதந்திரமாகக் கற்கலாம். ஆனால், அதை கட்டாயப்படுத்தக்கூடாது." என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
