மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
நாகை, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியா், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா், உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாகையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முத்துசாமி, ராஜராமன், சரவணன் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சத்தியமூா்த்தி, மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் அன்பழகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுதாகா், சண்முகவேல், முத்துவேல் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் செ. பிரகாஷ், ஜாக்டோ-ஜியோ உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் துரைராஜ், ஜவகா், ரவி, உமாநாத், காசிதுரைராஜ், அனைத்து மருந்தாளுநா்கள் சங்க மாநில பொதுச் செயலாளா் யு. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் அதன் மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.