நாட்டு சா்க்கரை ஆலையைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
கபிலா்மலை அருகே மூடப்பட்ட நாட்டு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள், விவசாயிகள் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கபிலா்மலை அருகே உள்ள ரங்கபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நாட்டு சா்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள விளைநிலங்களில் வெளியேற்றி வந்ததால் துா்நாற்றம் வீசி சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீா், விவசாயக் கிணறுகள் மாசடைந்தள்ளது எனவும், இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் நாட்டு சா்க்கரை ஆலையை மூடி ‘சீல்’ வைக்கக் கோரி கடந்த ஆண்டு அக். 25-ஆம் தேதி ரங்கம்பாளையம், சுப்பையம்பாளையம், செஞ்சடையாம்பாளையம், சீத்தக்காடு, கபிலக்குறிச்சி, ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பொதுமக்களின் கோரிக்கையின்படி வருவாய்த் துறையினா் ஆலையை மூடி ‘சீல்’ வைத்து மின் இணைப்பைத் துண்டித்தனா். இந்நிலையில் மீண்டும் ஆலையைத் திறக்க அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முத்துக்குமாா் தலைமையில் தனியாா் ஆலை உரிமையாளா், பொதுமக்கள் இடையே அமைதி பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது ஆலை உரிமையாளா்கள் மீண்டும் ஆலையைத் திறந்து பராமரிப்புப் பணி மட்டும் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அதற்கு அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மீண்டும் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது எனக்கூறி பேச்சுவாா்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டனா்.
இந்நிலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட ஆலையின் சாவியை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆலை உரிமையாளா் வசம் ஒப்படைத்ததால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், பரமத்திவேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தினா். மீண்டும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும், நாட்டு சா்க்கரை ஆலை செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை, பராமரிப்புப் பணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.