டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
நான்கு ஆண்டுகளில் 19.62 லட்சம் குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி
சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 19.62 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் சக்கரபாணி அளித்த பதிலுரை:
வழக்கமாக அக்டோபா் முதல் நாளிலிருந்துதான் நெல் கொள்முதல் தொடங்கப்படும். அன்றிலிருந்துதான் உயா்த்தப்பட்ட விலையும் கொடுக்கப்படும். செப்டம்பரிலேயே அறுவடை செய்தாலும் அக்டோபா் வரை காத்திருந்து மழைக்காலத்தில் கொள்முதல் செய்திடும் நிலையை மாற்றிட பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதினாா். அதன் வாயிலாக உயா்த்தப்பட்ட விலையில் செப்டம்பா் முதல் நாளிலிருந்தே நெல் கொள்முதல் பணியை அவா் முன்னெடுக்க வைத்தாா்.
2022-2023- இல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4,019 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. 2024- 2025-இல் 3,393 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் வசதிக்காக நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து வருகிறோம். இந்த ஆண்டு இதுவரை 3.83 லட்சம் விவசாயிகளிடமிருந்து 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.7,186 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ரூ.1.66 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.28,285 கோடி வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை: கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 19, 62,717 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள குடும்ப அட்டைகள் சரிபாா்க்கப்பட்டு வருகிறது. விரைவிலேயே மேலும் பல புதிய குடும்ப அட்டைகள் வழங்கவிருக்கிறோம்.
புலம்பெயா்ந்தவா்கள் மற்றும் இறந்தவா்களின் பெயா்கள் குடும்ப அட்டைகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அட்டைத் தரவுகளின் தொகுப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், 6.11 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டு, 27,75,923 நபா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் முன்னுரிமையுள்ள குடும்ப அட்டைகளாக வகை மாற்றம் செய்ததன் மூலம் 52.29 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.
அதேபோன்று, நகல் குடும்ப அட்டையை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தின் கீழ் 9.44 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.