இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
'நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை... அந்த போட்டோவில் இருப்பதும் நான் இல்லை' - சீமான் சொல்வதென்ன?
இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்கிறோம்.
பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளனர். திகவில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன? பெரியாரை எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை.
`யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை'
நான் பிரபாகரனின் ரத்த உறவு அல்ல, லட்சிய உறவு. அவரது லட்சியத்துக்காக நாங்கள் தான் நிற்கிறோம். பிரபாகரனின் அண்ணன் மகனுக்கு உலகம் முழுவதும் உள்ள சொந்தங்கள் பதில் சொல்வார்கள். ஒருவர் நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என்கிறார். மற்றொருவர் 8 நிமிடம் தான் சந்தித்தேன் என்று கூறுகிறார்.
ஒருவர் போட்டோ எடிட் செய்ததாக கூறுகிறார். நானே சொல்கிறேன் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. இப்போது எதை நம்புவீர்கள். பிரபாகரன் உடன் எடுத்த போட்டோ உண்மை என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை என்கிறேன். வேறு ஏதாவது கேள்வி கேளுங்கள். ஈரோடு தேர்தலில் நல்ல ஆண்மகனாக இருந்தால் சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என சொல்ல வேண்டும். பெரியார் திராவிடத்தின் குறியீடு, பிரபாகரன் தமிழின் அடையாளம். பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல.
பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்றாவது சக்தியாக வந்துள்ளேன்.சூரியன் உதித்தால் தான் விடிவு வரும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு வரும்.” என்றார்.