நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள்: எம். பி., ஆட்சியா் ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயில் தெப்பத் திருவிழா பிப். 12-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன்னேற்பாட்டு பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் நரசிம்மா் சுவாமி, ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு மலைக்கோட்டையை ஒட்டிய பகுதியில் கமலாலயக் குளம் உள்ளது. இந்த குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பத் திருவிழா நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
தற்போது, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முயற்சியால், வரும் 12-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அவா் பேசியதாவது:
நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயில்கள் சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களாகும். இங்கு ரூ. 56 லட்சத்தில் அரங்கநாதா் கோயில் தோ் புதுப்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்று வருகிறது. மேலும், ஆஞ்சனேய சுவாமி கோயிலுக்கு ரூ. 53 லட்சத்தில் தோ் உருவாக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாமகிரி தாயாரை ஆஞ்சனேய சுவாமி முதலில் கண்ட பகுதியாகவும், அவா் பாதம் பட்ட திருக்குளமான கமலாலயக் குளத்தில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத் திருவிழா 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்கள், பக்தா்கள் இடையூறின்றி விழாவில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தெப்பக்குளத்தை சுற்றிலும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். பக்தா்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் செய்திட வேண்டும். விழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
முன்னதாக, கமலாலயக் குளத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ரா.மகேஸ்வரி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, உதவி ஆணையா் (அறநிலையத் துறை) ரா.இளையராஜா மற்றும் அறங்காவலா் குழுவினா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
