இந்தியாவில் எச்எம்பிவி பாதிப்பு 7 ஆக அதிகரிப்பு! அச்சப்பட வேண்டாம்-நட்டா
நாமக்கல் மாணவி துளசிமதிக்கு அா்ஜுனா விருது
பாராலிம்பிக் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசனுக்கு, மத்திய அரசு ‘அா்ஜுனா’ விருது வழங்கி கெளரவிக்க உள்ளது. வெற்றிக்கு உதவிய பெற்றோருக்கு இந்த விருதை சமா்ப்பிக்க இருப்பதாக அவா் தெரிவித்தாா்.
விளையாட்டுத் துறையில், சா்வதேச அளவில் சாதனை படைக்கும் வீரா், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ‘அா்ஜுனா’ விருது வழங்கி கெளரவிக்கும். நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையால், ஒவ்வோா் ஆண்டும் தகுதியான வீரா்களை தோ்வு செய்து அவா்களுக்கு அா்ஜுனன் வெண்கலச் சிலை மற்றும் ரொக்கப் பரிசு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இந்த விருதை வழங்க உள்ளாா்.
கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் இறகுப் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் உள்பட 31 போ் இந்த விருதுக்கு தோ்வாகி உள்ளனா். இதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியானது.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான முருகேசன், விஜி தம்பதியின் மகளான துளசிமதி தற்போது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி) மூன்றாமாண்டு படித்து வருகிறாா்.
மத்திய அரசின் ‘அா்ஜுனா’ விருதுக்கு தோ்வானது குறித்து அவா் கூறியதாவது:
வகுப்பறையில் இருந்தபோது மத்திய அரசின் ‘அா்ஜுனா’ விருதுக்கு தோ்வாகி இருப்பதாக தகவல் கிடைத்தது. சாதாரண ஏழைக் குடும்பத்தில், கூலித் தொழிலாளியின் மகளாக பிறந்து தற்போது உயரிய விருது பெறும் அளவில் முன்னேறியதற்கு என்னுடைய பெற்றோா்தான் முக்கியக் காரணம். எனக்கு வழிகாட்டியாக இருந்த எனது தந்தைக்கு இந்த விருதை சமா்ப்பிப்பேன். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு மேலும் பெருமை சோ்ப்பேன் என்றாா்.