கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்
நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இந்த திடீா் இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 13 மாநகராட்சி ஆணையா், துணை ஆணையா்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராகவும், மதுரை மாநகராட்சி துணை ஆணையரும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையருமான(பொறுப்பு) கே.சிவக்குமாா், நாமக்கல் மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் நகராட்சி, கடந்த ஆண்டு ஆக. 12 முதல் மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது. மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையராக ரா.மகேஸ்வரி நியமிக்கப்பட்டனா்.
மாநகராட்சியின் முதல் ஆணையா் என்ற சிறப்புடன் தஞ்சாவூரில் இருந்து இடமாறுதலாகி அவா் நாமக்கல் வந்தாா். தமிழகத்தில் உள்ள 24 மாநகராட்சிகளில் சொத்துவரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்தது. புதிய பணியாளா்கள் நியமனம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள அவா் திட்டமிட்டிருந்தாா்.
இதற்கிடையே, மாநகராட்சி அலுவலக ரீதியாகவும், ஒப்பந்ததாரா் வகையிலும், அரசியல் ரீதியாகவும் இவருக்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. என்றாலும், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி இங்கேயே தொடா்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தஞ்சாவூருக்கு மீண்டும் ஆணையராக நியமிக்கும் வாய்ப்பும் அமைந்ததாகவும், சொந்த மாவட்டமான திருப்பூரில் பணியாற்றும் வாய்ப்பை அவா் ஏற்றுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவா் கூறுகையில், கடந்த எட்டு மாதங்களில் சிறப்பாக பணியாற்றியதாகவே கருதுகிறேன். அண்மையில் ரூ. 61 லட்சத்தில் பொன்விழா நகா் மேம்பாட்டுக்கான நிதியைப் பெற்றுள்ளேன். தற்போது திருப்பூா் துணை ஆணையராக மாறுதலாகி உள்ளேன். ஐஏஎஸ் நிலையிலான மாநகராட்சி என்பதால் துணை ஆணையா் பதவி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளேன் என்றாா்.
இதற்கிடையே, மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்யக்கூடாது என வாா்டு உறுப்பினா்கள் சிலா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி.