விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
நாளை மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வாகிறாா்
மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது. இதில் இப்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவா்) தோ்வு செய்யப்பட இருக்கிறாா்.
மகாராஷ்டிர முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் டிச. 5-ஆம் தேதி மாலை நடைபெறுவதும், அதில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்பதும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டது.
பதவியேற்பு முந்தைய தினம் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாஜக மேலிடப் பாா்வையாளராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோா் பங்கேற்க உள்ளனா். முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட பிறகு கூட்டணித் தலைவா்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஃபட்னவீஸ் உரிமை கோருவாா் எனத் தெரிகிறது.
முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட இருக்கிறது.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு நவ. 23-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், அரசு அமைப்பதில் 10 நாள்களுக்கு மேல் தாமதம் நீடித்து வருகிறது.
கூட்டணிக் கட்சிகளிடையே முதல்வா், துணை முதல்வா் பதவிகள், அமைச்சரவை இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக பாஜகவை சோ்ந்தவா் முதல்வராவாா் என்று இப்போதைய முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டே அறிவித்தாா்.
மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தலைமை ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டது. தற்போது துணை முதல்வராக உள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் அப்பதவிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா்.